ஊசியும் காந்தமும்
47
அதற்குள் ஒர் அழகிய யெளவன மங்கையின் படமிருந்தது. அதன் கம்பீரத்தையும் எழிலையும் கண்ட அனைவரும் பிரமிப்படைந்தனர்.
அப்போது "இதுதான் இறந்துபோன எஜமானருடைய இளைய பத்தினியின் படம்” என்றான் ஸகாராம் ராவ்.
ஜெமீந்தார் அதைக் கண்டு சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்று அதையே உற்று நோக்கினார். அதன் பிறகு அவரது கண்கள் அந்தப் படத்தைவிட்டு மல்லிகாவின்மேல் திரும்பின.
அதைக் கண்ட ஸகாராம் ராவும் மல்லிகாவைப் பார்த்து ஆச்சரியமடைந்தான். அவர்கள் படத்தையும் தன்னையும் மாறி மாறிப் பார்த்ததைக் கண்ட மல்லிகா வெட்கிக் கீழே குனிந்தாள்.
"இறந்துபோன ஜெமீந்தாருடைய இளைய பத்தினியின் படத்தையும் மல்லிகாவின் படத்தையும் ஒரே சமயத்திற் கண்டோம்” என்று கூறி ஜெமீந்தார் சிரித்தார்.
"மல்லிகாவின் படமா?" என்று கமலா ஸீதா இருவரும் ஆச்சரியமடைந்தவர்களாய்ப் படத்தையும் அவளையும் பார்த்து, "சே! இந்தப் படமெங்கே இவளெங்கே? இதன் காலில் ஒட்டிய தூசுக்கும் இவள் இணையாவாளா?" என்றார்கள்.
"முழு உருவத்துக்கே இணையாகும்போது காலில் ஒட்டிய தூசுக்கு ஏன் இவள் இணையாகிறாள்? நீ சொல்வது நிஜந்தான்” என்று கபடமாகச் சிரித்துக்கொண்டு பேசிய ஜெமீந்தார், "ஸ்காராம்! இந்தப் படத்தைப் பரசுராம பாவாவின் படத்துக்குப் பக்கத்தில் மாட்டிவிடும்" என்றார்.
"சரி! உத்தரவுப்படியே செய்கிறேன்" என்றான் ஸகாராம்.
அப்போது, "நேரமாகிறது, போகலாம் வாருங்கள்” என்றார் ஜெமீந்தார். உடனே எல்லோரும் வெளியில் வந்தனர்.
அன்றிரவு அந்த மாளிகையிலேயே அவர்கள் அனைவருக்கும் சிறப்பான விருந்து நடத்தப்பட்டது. பிறகு ஒவ்வொருவரும் தத்தமக்கு ஏற்படுத்தப்பட்ட விடுதிகளில் சுகமாகச் சயனித்துக் கொண்டனர். இரவு 11-மணி நேரமிருக்கலாம். மல்லிகா சயனித்த அறையிலிருந்த ஜன்னலின் கதவு திறந்திருந்தமையால், அதன் வழியாக குளிர்ந்த காற்று உட்புறத்தில் நன்றாக வீசியது. அதனால் அவள் திடீரென்று கண்ணை விழித்துக்கொண்டு