பக்கம்:வசந்த மல்லிகா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரை புரண்ட காதல்

53

சொற்களைக் கேட்கவும், நீயே எனக்குச் சாசுவதமான இன்பத்தைத் தரக்கூடிய மனையாட்டியென்னும் நிச்சயம் என் மனசில் தானாகவே உதித்துவிட்டது. எனக்கு உயிர்ப்பிச்சை தரக்கூடிய அந்த வார்த்தையைச் சொல்லி, என்னைக் கை துக்கி விடுவாயா? அல்லது, என்னை ஆயுட்கால முழுவதும் மனம் வருந்தி பித்தனைப்போல அலைந்து திரிய விடுவாயா? என் செல்வமே! எவருக்கும் கிடைக்காத நிதிக்குவியலே! எங்கே உன் மனசில் உள்ளதைத் தெரிவி!" என்று மேன்மேலும் கெஞ்சி மன்றாடினார்.

அதற்குமேல் ஒன்றையும் சொல்லமாட்டாதவளாயும், தன்னைச் சூழ்ந்து மென்மேலும் வளைத்த அவரது இன்ப வலையை விலக்க வல்லமையற்றவளாயும் மல்லிகா தனது நாவின் நுனியிலெழுந்த சொற்களை வெளியிட வெட்கி சிறிது தயங்கினாள். அடுத்த நிமிஷத்தில், "எனக்கும் இதுவரையில் எவரிடத்தில் உண்டாகாத ஒருவிதமான பிரேமை தங்களிடத்தில் உண்டாய்விட்டது. இனி தங்களையே ஆதரவாக மதித்தேன். தாங்கள் என்னை எந்த வழியில் விட்டாலும் அது சம்மதமே” என்று மிகவும் தடுமாறிய குரலில் தெரிவித்தாள் மல்லிகா.

அதைக் கேட்ட ஜெமீந்தார் பிரம்மாநந்தமடைந்தவராய், “என் கண்ணே! மல்லிகா! நீ சொல்வது உண்மைதானா? நீயும் என்னைக் காதலிக்கிறாயா? இது கனவோ? அல்லது நினைவோ? என் தவப் பயனாகிய உன்னை அடைவேனா என்று ஏங்கிக் கிடந்த எனக்கு நீ மிகவும் எளிதில் கிடைத்தாயோ? இனி நான் உன்னையே என் குலதெய்வமாக மதித்து தினந்தினம் கொண்டா டுவேன். என் கனியே! என்னையே மணப்பதாக ஒரு முறை தெரிவி; அப்போதே என் செவிகளும், என் மனமும், என் தேகமும் ஒருங்கே பேராநந்தமடையும்" என்று வேண்டி நயந்தார் ஜெமீந்தார்.

"தங்களையே மணக்கிறேன்" என்று பெருகி வதைக்கும் நாணத்தோடு மொழிந்தாள் மல்லிகா. தேனிலும் அமிழ்திலும் மதுரமான கனிகளிலும் மிகுந்த இனிமையே வீசிய அம் மொழியைக் கேட்ட வஸந்தராவ் அடக்கவொண்ணாத காதலின் மிகுதியால் தம்மை மறந்தவராய் மல்லிகாவை வாரியெடுத்து ஆலிங்கனம் செய்து அவளது முகத்தில் முத்தமழை பொழிந்தார். முதலில் சிறிது சும்மாவிருந்த அப்பெண்மணி அஞ்சி நடுங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/71&oldid=1229336" இலிருந்து மீள்விக்கப்பட்டது