64
வஸந்தமல்லிகா
அன்றிரவு சற்றேறக்குறைய மூன்று மணி நேரமிருக்கலாம். எங்கும் இருள் நன்றாகச் சூழ்ந்திருந்தது. அந்தச் சமயத்தில் மல்லிகா சமுத்திரக் கரையையடைந்தாள்; அவ்விடத்தில் ஒரு பெட்டி வண்டியோடு காத்திருந்த ஜெமீந்தார், அப்போது குளிர்காற்று அதிகமாக வீசியதாகையால், தாம் கொணர்ந்திருந்த அழகிய கான்பூர் சால்வையை அவளுடம்பில் போர்த்தி, அவளை அன்போடு நடாத்தி பெட்டி வண்டியில் உட்காரவைத்து, தாமும் எதிரில் உட்கார்ந்து கொண்டார். வண்டி உடனே செல்ல ஆரம்பித்தது.
விடியற்காலம் நாலரை மணிக்கு வண்டி தஞ்சையில் வடக்கு ராஜவீதியிலிருந்த ஒரு பெரிய சத்திரத்தின் வாசலில் வந்து நின்றது. அந்தச் சத்திரம் வழிப்போக்கர்கள் தங்கும்பொருட்டு கட்டப்பட்டிருந்ததாயினும், அதன் ஒரு பாகத்தில் கோயமுத்தூர் நடேசையர் போஜனசாலை வைத்திருந்தார். அதற்கடுத்தாற்போல சத்திரத்திற்குச் சேர்ந்தவையும், வாடகைக்கு விடக்கூடியவையுமான நாலைந்து வீடுகளிருந்தன.
ஜெமீந்தார் வண்டியை விட்டிறங்கி, சில வீடுகளுக்கப்பால் ஒரு வீட்டிலிருந்த சத்திரத்து மணியகாரன் பவானிராவ் என்பவனை எழுப்பி ஏதாகிலும் காலி வீடு இருக்கிறதாவென்று கேட்க, அவன் ஒரு வீடு காலியிருப்பதாய்ச் சொல்லி அவரை அதற்குள் அழைத்துக் கொண்டு போய்க் காட்டினான். தாமும் தமது மனைவியும் அதில் சொற்பகாலமிருக்க வேண்டுமென்றும், தேவையானால், ஒரு மாதத்து வாடகை முன்னாலேயே தருவதாயும் ஜெமீந்தார் அவனிடம் கூறவே, அவன் "முன்பணமொன்றும் தேவையில்லை. தங்களைப் பார்க்கும்போதே பெரிய மனிதரென்பது தெரிகிறது. தங்களுடைய விருப்பப்படி செளக்கியமாக இருங்கள். தங்களுக்கு என்னென்ன செளகரியங்கள் தேவையோ அவைகளைச் செய்து கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். தங்களுடைய பெயரை மாத்திரம் தெரிவித்தால் அதுவே போதும். கணக்கில் பதிந்து கொள்ளுகிறேன்” என்றான்.
அதைக்கேட்ட ஜெமீந்தார் தமது பெயரைச் சொல்ல நினைத்தார். ஒருவேளை துக்கோஜிராவ் தம்மையும் மல்லிகா