பக்கம்:வசந்த மல்லிகா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸுகைாரம்பம்

67

சொல்லிவிடு, எமுனாபாயி என்று தெரிவி, நான் அதிசீக்கிரத்தில் திரும்பி வந்து விடுகிறேன். ஜாக்கிரதையாக இரு" என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே வந்தார். வாசலில் பெட்டி வண்டி தயாராக வந்து நின்று கொண்டிருந்தது. அதில் அவர் உட்கார்ந்து கொள்ள, வண்டி செல்ல ஆரம்பித்தது.

அப்போது, அவர்கள் இறங்கியிருந்த வீட்டிற்கு அடுத்த வீட்டிற்குள்ளிருந்து, தற்செயலாக வெளியில் வந்த ஒரு யௌவனப் புருஷர், வஸந்தராவ் வண்டியிற் சென்றதைப் பார்த்துத் திடுக்கிட்டு அதிசயித்தவராய் கைதட்டி அவரைக் கூவியழைத்துக்கொண்டு வண்டி போன திக்கில் சிறிது தூரம் வந்தார். அவர் கூவியது குதிரையின் குளம்படியோசையினால், வஸந்தராவின் செவியிற்படவில்லை. வண்டி இரண்டொரு நிமிஷத்தில் நிரம்பவும் தூரத்தில் போய்விட்டது.

கைதட்டி வஸந்தராயரை அழைத்தவர் கலியாணபுரத்தின் ஜெமீந்தாரான மோகனராவ். அவர் மேலும் வண்டியுடன் செல்லாமல் திரும்பி, மணியகாரனான பவானிராவின் வீட்டிற்குப் போய் அவனை அழைத்து, "அதோ அந்தப் பெட்டி வண்டியில் போகிறவர் இந்த வீட்டிற்குள்ளிருந்து போனாரே. அவர் இங்கே குடியிருக்கிறாரா?" என்று ஆவலோடு கேட்டார். "ஆம்; இங்கே அவரும் அவருடைய மனைவியும் இருக்கிறார்கள். அந்த அம்மாள் அவருடைய பேரழகுக்கு தகுந்த ரதியாகவே நிரம்பவும் ஸொகுஸாயிருக்கிறாள்! இருவரும் விடியற்காலம்தான் வந்தார்கள்" என்றான் மணியகாரன்.

அதைக்கேட்ட ஜெமீந்தார் செய்யவேண்டுவதையறியாமல் சற்றுநேரம் அப்படியே நின்றவண்ணம், “அப்படியா! நிரம்ப சந்தோஷம்! அவர் என்னுடைய அருமையான சிநேகிதரல்லவா! அவர் இந்த இடத்திலிருப்பது நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது. நான் அவருடைய சம்சாரத்தினிடத்தில் சில விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். வேலைக்காரியை அழையும்" என்றார். மணியகாரன் உடனே போய்க் கன்னியம்மாளை அவரிடம் அனுப்பினான். "அடீ! கன்னி! இங்கே வந்திருக்கும் அம்மாளிடம் போய், அவளுடைய புருஷரின் சிநேகிதரான கலியாணபுரம் ஜெமீந்தார் பார்க்க வந்திருக்கிறாரென்று தெரிவி" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/85&oldid=1231206" இலிருந்து மீள்விக்கப்பட்டது