10-வது அதிகாரம்
பெண்டாட்டிப் பித்து
தஞ்சைப் பட்டணத்திற்கு அரை மைல் தூரம் வடக்கில் வடவாறென்னும் சிற்றாறு ஒடுகின்றது. அதன் வடக்குக் கரையின் மீது கருந்தட்டான்குடி என்னும் ஊர் இருக்கிறது. அந்த ஆற்றின் கரையோரமாக நீளத்தில் சுமார் அரை மைல் தூரம் வரையில் கருங்கல் படித்துறை கட்டப்பட்டிருக்கின்றது. அதையடுத்தாற் போல் மண்டபங்களும், குளங்களும், அழகிய சோலைகளும் இருக்கின்றன. அந்த இரமணியமான இடத்திற்கு வம்புலாஞ் சோலையென்பது பெயர். முன் அதிகாரத்தில் குறிக்கப்பட்ட நாட்காலையில் பீமராவ் ஆற்றங்கரைக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தான். கடைசியாக அவனும் ஸகாராம்ராவும் சம்பாஷித்துக் கொண்டிருந்த தினத்திற்குப் பிறகு, இறந்து போன பரசுராம பாவாவிற்கு வேறே எவரேனும் வார்சுதார்கள் இருக்கிறார்களா என்பதை விசாரிப்பதிலும், கலியாணபுரம் ஜெமீந்தாரை மேன்மேலும் கடன்வாங்கத் தூண்டுவதிலுமே அவன் தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான். அந்த வார்சுதாரைக் கண்டு பிடித்து இரண்டு கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்களை அவருக்குச் சேர்ப்பித்தால், தான் அதில் பாதியாவது பெற்று விடலாம் என்று நினைத்து பெருத்த பைத்தியங்கொண்டவனாய், அதே நினைவாக யாதொரு பயனுமின்றி அவன் அலைந்து திரிந்தான். அன்று அவர்கள் சம்பாஷித்த பிறகு, பீமராவ் தனது வீட்டிற்கே போகாமலிருந்தான். ஆகையால் ஸகாராம் ராவ் ஏதாவது புதிய சங்கதி தனக்குத் தெரிவிப்பான் என்ற எண்ணங் கொண்டவனாய் அன்று தனது வீட்டிற்குப் போகும் நோக்கத்துடன் அவன் வம்புலாஞ் சோலையின் வழியாக வந்து கொண்டிருந்தான்.
*வம்பு - வண்டு; உலாம் - உலாவும்