பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வஞ்சிமாநகரம்



“நீ பொருட்படுத்தும் அளவிற்குப் பொறுப்புள்ளவன் என்பதாலேயே நானும் உன்னைக் கூப்பிட்டேன். மாமன்னர் வடதிசையிலிருந்து திரும்பு முன் கடம்பர் கடல் முற்றுகையைத் தீர்த்துவிடவேண்டும். மீண்டும் அதை வற்புறுத்துகிறேன்” என்றார் அமைச்சர்.

அவருக்கு மீண்டும் அந்த உறுதிமொழியை அளித்து விட்டுப் புறப்பட்டான் குமரன். இதை வற்புறுத்துவதற்காக மீண்டும் அவர் தன்னை வேளாவிக்கோ மாளிகைக்கு அலைய வைத்ததை அவன் வெறுத்தாலும், ‘மன்னர் வடதிசையிலிருந்து திரும்புவதற்கு முன் போரை வெற்றிகரமாக முடிக்கவேண்டும்’ என்று விரும்பும் அவருடைய அந்தரங்க விருப்பத்தை மனமாரப் போற்றினான் குமரன். கடம்பர்களைப் பொருத்தவரை கடமைக்காகப் போராட வேண்டிய அவசியமும் அவனுக்கு இருந்தது. கடைசியாக அமுதவல்லியைச் சந்தித்த வேளையையும், பேசிய பேச்சையும் நினைவு கூர்ந்தான் அவன்.

‘நாளைக்கு இதே வேளையில் இங்குவர மறந்துவிடாதே அமுதவல்லி! ஊரெல்லாம் ஆந்தைக்கண்ணனைப் பற்றிய பயமாயிருக்கிறதே என்று பேசாமல் இருந்து என்னை ஏமாற்றி விடாதே. உன் தந்தையார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார் எங்கே தம்முடைய இரத்தினங்களை எல்லாம் ஆந்தைக்கண்ணன் வாரிக்கட்டிக்கொண்டு போய்விடுவானோ என்று அவருக்குக் குடல் நடுங்கும். உன் தந்தை தன்னிடமுள்ள எல்லா இரத்தினங்களைப் பற்றியும் கவலைப்படட்டும். ஆனால், ஒரே ஒரு விலை மதிப்பற்ற இரத்தினத்தைப் பற்றி மட்டும் அவர் கவலைப்படுவதை விட்டுவிடலாம்’ என்று கூறிவிட்டு, ‘நீதான் அந்த விலைமதிப்பற்ற இரத்தினம் அமுதவல்லி!’ என்று தான் அவளைப் புகழ்ந்துரைத்ததையும் வஞ்சிமாமநகரத்திலிருந்து கொடுங்கோளுருக்குத் திரும்பிக் கொண்டிருந்த இந்த வேளையில் நினைவு கூர்ந்தான் படைத் தலைவன் குமரன் நம்பி.