பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

99



அமுதவல்லியின் வசீகரமான முகமும், எழில் நிறைந்த புன்சிரிப்பும், பருகும் விழிச்சுடர்களும் நினைவு வந்து அவனை உருக்கின. இரவின் குளிர்ந்த காற்றும், சாலையின் தனிமையான சூழலும் அவன் உள்ளத்தை நெகிழச் செய்தன. அந்த நெகிழ்ச்சியில் மனதுக்கினியவளின் நினைவே பெருகியது. வழியெல்லாம் அந்த நினைவின் இனிமையிலேயே கடந்தான் அவன். கொடுங்கோளுரை அடையும்போது நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டது. படைக் கோட்டத்தில் வாயிற்காப்போரைத் தவிர வேறொருவரும் இல்லை. வீரர்கள் அனைவரும் பொன்வானியாற்று முகத்திலேயே காத்திருப்பதாகத் தெரிய வந்தது. அமைச்சரின் அந்தரங்க ஊழியர்களாகிய வலியனும் பூழியனும் கூடப் படைக்கோட்டத்தில் இல்லை. அவர்களும் கூட உறக்கத்தைக் கெடுத்துக்கொண்டு ஆற்று முகத்திற்குச் சென்றிருப்பதாகக் காவல் வீரர்கள் கூறினார்கள்.

குமரனும் உடனே ஆற்று முகத்திற்கு விரைந்தான். வீரர்கள் தங்கள் தலைவனைக் கண்டதும் முகமலர்ந்தனர். தலைவன் அமைச்சரிடம் இருந்து அறிந்து வந்த செய்தியைப் பற்றித் தங்களுக்கு ஏதேனும் கூறுவானோ என்ற எண்ணமும் ஆர்வமும் படைவீரர்களுக்கு இருந்தது. ஆனால் அத்தகைய ஆர்வம் எதுவுமே இல்லாமல் நிதானமாக இருந்த இருவரும் அக்கூட்டத்தில் விருப்பு வெறுப்பற்றுக் காணப்பட்டனர். அவர்களே வலியனும் பூழியனும் ஆவார்கள். அமைச்சர் குமரனை எதற்காகக் கூப்பிட்டனுப்பினார் என்பதைத் தெரிந்து கொள்வதில் அவர்கள் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.

அது குமரனுக்கே வியப்பையும் திகைப்பையும் அளிக்கக் கூடியதாயிருந்தது. ஏனைய வீரர்களிடமும் அமைச்சரைச் சந்திக்கச் சென்றது பற்றி அவன் எதுவும் கூறவில்லை. ‘முற்றுகையை விரைவில் முறியடிக்க வேண்டும்’ என்பதை பொதுவாகக் கூறினார் என்று தெரிவித்துவிட்டு மேலே ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினான் குமரன்