பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வஞ்சிமாநகரம்


 கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களைத் தானும் தன் நண்பர்களும் வளைத்துத் தாக்கக் செல்வதை அவர்கள் ஏன் அவ்வளவு அக்கறையாகக் கவனிக்க வரவில்லை என்பது குமரன் நம்பிக்கு ஓரளவு ஐயப்பாட்டை உண்டாக்கியது. அமுதவல்லியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்பது அமைச்சர் மூலமும், அவருடைய அந்தரங்க ஊழியர்கள் மூலமுமே அதிகமாக வற்புறுத்தப்பட்டிருக்க அதைச் செயற்படுத்தும்போது, அவ்வூழியர்கள் காணாததுபோல விலகிச் சென்று விட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நிலையில் இருந்தான் குமரன் நம்பி.

ஆனால், தனியே அதை மட்டுமே சிந்தித்துப் பார்க்கவும் அப்போது அவனுக்கு வாய்ப்பில்லை. ஒரு பெரிய கடல் முற்றுகையைத் தளர்த்தி எதிரிகளின் மரக்கலங்களில் புகுந்து சோதனையிட வேண்டிய காரியத்துக்காக விரைந்து கொண்டிருந்தான் அவன். அந்த நிலையில் அழும்பில்வேளின் அந்தரங்க ஊழியர்களான அவர்கள் இருவரும் ஏன் தங்களைப் பின் தொடரவில்லை என்பதைப் பற்றியே கவலைப்பட முடியாமலிருந்ததற்காக அதிகம் வருத்தப்படாமல் தன் செயல்களைக் கவனித்துச் செய்யலானான் கொடுங்கோளூர்ப்படைக் கோட்டத் தலைவன்.


18. கடம்பர் மரக்கலங்களில்

திட்டமிட்டபடியும் எந்தெந்தத் திசைகளிலிருந்து எப்படித் தாக்குவது என்று வகுத்துக் கொண்டபடியும்-கொடுங்கோளூர்ப் படை வீரர்கள் படகுகளில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். நல்ல வேளையாகக் கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்கள் எல்லாம் இன்னும் முன்னிருந்த இடத்திலேயே இருந்தன. எந்த மரக்கலமும் எண்ணிக்கையில் குறையவில்லை என்பது படைத் தலைவனுக்குத் திருப்தியளித்தது. பொதுவாகக் கடம்பர்களின் கொள்ளையிடும் முறை எப்படியென்றால், கொள்ளையிட்ட