பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

107



“கோழைகள்தான் பொய்களைச் சொல்லுவார்கள். கடம்பர்கள் என்றுமே கோழைகளாக இருந்ததில்லை. உங்கள் கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் விலை மதிப்பற்ற இரத்தினங்களையும் முத்துக்களையும் மணிகளையும் அவைகள் நிறைந்திருக்கும் வணிகக் கிடங்குகளையும் கொள்ளையடிக்கும் ஆசை எங்களுக்கு உண்டு அதை நீங்களும் அறிவீர்கள், உலகமே அறியும். ஆனால் நீங்கள் ஏதோ புதுக்கதையை அல்லவா சொல்லுகிறீர்கள்? கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகளை நாங்கள் சிறைப்பிடித்து வந்திருப்பதாக நீங்கள் கூறுவது விநோதமாக அல்லவா இருக்கிறது! அப்படி ஒரு வணிகரின் மகளைச் சிறைப்பிடித்து எங்களுக்கு என்ன ஆகவேண்டும்?” என்று ஆந்தைக்கண்ணனும் பிடிவாதமாக மறுத்துக் கூறினான்.

அவன் வார்த்தைகளை நம்புவதைவிட எல்லா மரக்கலங்களையும் சோதித்துப் பார்த்துவிடுவதே நல்லதென்று ஆந்தைக் கண்ணனும் அவன் ஆட்களும் நின்றுகொண்டிருந்த மரக் கலத்தை முதலிலேயே சோதனை செய்துவிட்ட காரணத்தால் வேறு மரக்கலங்களை குமரன் நம்பியும் அவன் ஆட்களும் சோதனையிடத் தொடங்கினார்கள்.

நிதானமாகவும் பொறுமையாகவும், ஒரு மரக்கலம் விடாமல் தேடித் துளைத்துப் பார்த்தும்-அமுதவல்லியைக் காணவில்லை. கடம்பர்கள் பொன்வானி முகத்துவாரத்தின் வழியாக நகருக்குள் வந்து அமுதவல்லியைச் சிறைப்பிடித்துக்கொண்டு போயிருந்தால் நிச்சயமாக அவர்களுடைய கொள்ளை மரக்கலங்களில் ஏதாவது ஒன்றில்தான் வைத்திருக்க வேண்டும். இத்தனைமரக்கலங்களில் எதிலும் அவள் இல்லை என்றவுடன் குமரன் நம்பியின் மனத்தில் சந்தேகம் எழுந்தது.

அமைச்சர் அழும்பில்வேளும் அவருடைய அந்தரங்க ஒற்றர்களும் எதற்காக இப்படி ஒரு பொய்யைத் தன்னிடம் கூறினார்கள் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.