பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

9



குறுக்கிட்டார்கள். நீண்ட கொம்புகளோடு முகபடாம் அணிந்த யானைகள் தங்களுடைய மணிகள் அளவாக விட்டு விட்டு ஒலிக்கும்படி சாலையில் செல்வதே கம்பீரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. வலியனும் பூழியனும் புரவிகளில் பயணம் செய்தார்கள். பயணத்தின்போது இருவரும் பல செய்திகளைப் பேசிக்கொண்டே பயணம் செய்தார்கள்.

“கொடுமை மிகுந்த கொள்ளைக்கூட்டத் தலைவனாகிய ஆந்தைக்கண்ணனையும் அவன் ஆட்களையும் வெல்வதற்குக் கொடுங்கோளுர்க் குமரனின் சாமர்த்தியமே போதுமென்று நம்புகிறாயா நீ?”- என்று பூழியனைக் கேட்டான் வலியன்.

“கொடுங்கோளுர்க் குமரன் - இதுவரை - பெண்களின் புன்னகையைத் தவிர வேறெதையும் வெற்றிக்கொண்டு பழக்கப்படவில்லை” என்று மறுமொழி கூறினான் பூழியன்.

“ஆனாலும் எல்லாம் தெரிந்தவராகிய அமைச்சர் பெருமானே நம் குமரனை எதிர்பார்க்கிறார் என்றால் அதில் ஏதோ சிறப்பிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.”

“அப்படியும் இருக்கலாம். ஆனால் பெரும் படைத் தலைவரும், பேரரசரும் வடதிசைப் படையெடுப்பு மேற்கொண்டு சென்றிருக்கிற இச்சமயத்தில் கொடுங்கோளுர்க் குமரனையும் விட்டால் வேறு யார்தான் இங்கு இருக்கிறார்கள்?”

“அதற்குச் சொல்லவில்லை ! பொதுவாக நம் அமைச்சர் பெருமானுக்கு விடலைப் பருவத்து இளைஞர்கள் மேல் அதிகமாக நம்பிக்கைகள் கிடையாது.”

“எல்லாச் சமயத்திலும் எல்லோரையுமே நம்பாமல் இருந்துவிட முடியாது அல்லவா? அப்புறம் ஆந்தைக்கண்ணன் பாடு கொண்டாட்டமாகி விடுமே?”

பேசிக் கொண்டே கொடுங்கோளுர்ச் சாலையில் விரைந்தார்கள் அமைச்சரின் அந்தரங்கத் துரதர்கள். அவர்கள் கொடுங்கோளுரை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஊர்