பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

வஞ்சிமாநகரம்



முந்தியநாள் மாலை வேளையில்தான் அதே பூந்தோட்டத்தில் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்ததை அறிந்து அவர் அவ்வாறு கேட்டாரா என்றறிய முடியாமல் - அப்போது தனக்கு ஒருவிதமான மனக் கலக்கம் ஏற்பட்டதையும் நினைவு கூர்ந்தான் அவன்.

திடீரென்று அவர் அந்தப்பூங்காவைப்பற்றிக் கேட்டதும் தான் நாக் குழறிப்போய் அவருக்கு மறுமொழி கூறமுடியாமல் திகைத்த வேளையில், ‘என் வயதுக்கும் முதுமைக்கும் இப்படிப்பட்ட அழகிய பூங்காக்களில் பிரியம் வைப்பது அவ்வளவாகப் பொருத்தமில்லை என்று உனக்குத் தோன்றலாம் குமரா! பூங்காக்களையும் பொழில்களையும் உன்போன்ற மீசை அரும்பும் பருவத்து வாலிபப் பிள்ளைகள்தான் நன்றாக அநுபவிக்க முடியு மென்றாலும் என்போன்ற முதியவர்களுக்கு இயற்கையழகின் மேலுள்ள பிரியம் ஒருநாளும் போய்விடுவதில்லை’ என்று அவனை நோக்கி விஷமமாகச் சிரித்துக் கொண்டே மேலும் வினாவினார் அவர்.

முன்நிற்கும் படைக்கோட்டத்துக் கடமைகளை மறந்துவிட்டு அதற்குப் பக்கத்திலுள்ள மலர்ப்பொழிவில் தான் அமுதவல்வியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததை அறிந்து வைத்துக் கொண்டுதான் அவர் இப்படித் தன்னிடம் அங்கதமாகப் பேசுகிறாரோ என்ற அச்சம் அன்று அவனைப் பிடித்தாட்டியது.

அந்த அச்சத்துடனும் பதற்றத்துடனுமே அன்று அவருக்கு மறுமொழிகளைச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். இன்றோ அவன் வந்திருக்கும் நிலைமை முற்றிலுமே வேறானது.

முன்பு கோநகருக்கு வந்த வேளைகளில் எல்லாம் - வேளாவிக்கோ மாளிகையின் மேலும் அமைச்சர் அழும்பில்வேளின் மேலும் இனம் புரியாத அச்சமும், பிரமிப்பும், மலைப்பும் அவனுள் நிரம்பியிருந்தன.