பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

115



வீரர்களாக வரவேற்க நம் நகரம் விழாக் கோலம் பூணப் போகிறது” என்று வேறு திசைக்குப் பேச்சை மாற்றினார்.

அதைக்கேட்டும் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவன் அதிகம் பேசாமல், “அரசர் பெருமானும் படைகளும் வெற்றிவாகை குடிக் கோநகருக்குத் திரும்புகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன் அமைச்சரே!” என்று மட்டும் அளவாக மறுமொழி கூறினான்.

“மன்னரின் வடதிசைப் படையெடுப்பு ஒன்றை மட்டும் இல்லை, எங்கும் படையெடுக்காமலே கடம்பர்களை நீ வென்ற வெற்றியையும் சேர்த்தே நாம் இங்கே கொண்டாடவேண்டும் குமரா! இப்போது நாம் கொண்டாட வேண்டிய வெற்றிகள் ஒன்றல்ல குமரா இரண்டு வெற்றிகளையுமே நாம் கொண்டாட வேண்டும்” என்று அமைச்சர் கூறியபோது,

“நான் பெற்றதும் ஒரு வெற்றி என நீங்கள் கொண்டாட முன் வந்திருப்பது தங்கள் கருணையைக் காண்பிக்கிறது அமைச்சரே!” என்று வேகமாக உடன் மறுமொழி கூறினான் குமரன் நம்பி.

தந்திரமான அவனுடைய இந்த விநயத்தின் பொருள் அவருக்கு உடனே விளங்கவில்லை.

“ஏன் அப்படிச் சொல்கிறாய் குமரா?” என்று அவன் கண்களில் மின்னும் உணர்ச்சி ரேகைகளைக் கவனித்தபடியே அவனைக் கேட்டார் அமைச்சர் அழும்பில்வேள்.

குமரன் நம்பியோ ஆத்திரத்தின் காரணமாகக் கட்டுப்பாடற்ற மனநிலையில் இருந்தான் அப்போது. எனவே அவனாலும் அமைச்சரை எதிர்கொண்டு பொருத்தமான மறுமொழி கூறிவிட முடியவில்லை.

சிறிது நேரம் ஒருவர் மனநிலையை ஒருவர் எடைபோடும் முயற்சியில் மெளனமாகக் கழிந்தது. அந்த விரும்பத்தகாத மெளனத்திற்குப்பின் குமரனே பேசினான்.