பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

117



வீரனுக்குத் தர்க்க சாத்திரத்தில் அதுமானத்திற்கும், கற்பனைக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியமென்று தாங்கள் கருதுவீர்களாயின் அவற்றை தெரிந்து வைத்திராதது என் குற்றமென்றே நான் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறு நான் செய்ய வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா அமைச்சரே?”

“நான் எதையுமே உன்னிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை குமரா! காரணங்களை வைத்து முடிவு செய்வது அதுமானம். காரணங்கள் இல்லாமலே முடிவு செய்வது கற்பனை. என்னைப் பற்றி நீ செய்திருக்கும் முடிவுகள் ‘அநுமானங்களா’ ‘கற்பனைகளா’ என்பதை இப்போது நீ தெளிவு செய்துவிட இயலும் என்றெண்ணுகிறேன். ஏனென்றால், கற்பனைக்கும் அநுமானத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நானே கூறி முடித்துவிட்டேன்.”

“நீங்கள் கூறியபடியே வைத்துக் கொண்டாலும் உங்களைப் பற்றிய என் முடிவுகள் அநுமானங்கள்தான் அமைச்சரே!” என்று அவன் உறுதியாக மறுமொழி கூறினான். பேச்சு ஒரு கடுமையான திருப்பத்தை அடைந்திருந்தது. அமைச்சரும் தளர்ந்து விடவில்லை.

“உள்ளே போய்ப் பேசலாம் வா”- என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றார் அமைச்சர்.

அந்த வேளாவிக்கோ மாளிகையின் உள்ளே சென்று எதை விவாதித்தாலும் அது அமைச்சருக்குச் சாதகமாக முடியுமென்ற உணர்வு ஒன்று குமரனுக்கு உள்ளுற இருந்தது.

முதலில் அவன் தயங்கியும் அவர் வற்புறுத்தி உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார். குமரனாலும் அந்த மாளிகைக்குள் சென்றவுடன் மனத்தில் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையையும் பிரமையையும் தவிர்க்க முடியவில்லை.