பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வஞ்சிமாநகரம்


அமைதியடைந்திருந்தது. இயல்பாகவே அமைதியடைகிற நேரமென்று சொல்லிவிடுவதற்கும் இல்லை. மகோதைக்கரை நெடுகிலும் பரவியிருந்த ஆந்தைக்கண்ணன் பயம் கொடுங்கோளுரில் மட்டும் குறைந்துவிடுமா என்ன? கொடுங்கோளுர்க் கோட்டை வாயில்கள் அவர்கள் சென்ற வேளையில் அடைக்கப்பட்டிருந்தன. மேற்குப் பக்கமாக இருந்த பெருங்கதவுகளிலே மட்டும் திட்டிவாசல் சிறிதளவு திறந்திருந்தது. உள்ளே போய்த் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாமல் வாயிலிலேயே உண்மை தெரிந்தது. கொடுங்கோளுர்க் குமரன் படைக் கோட்டத்திலுள்ளே இல்லையென்று வலியனுக்கும் பூழியனுக்கும் தகவல் அறிவிக்கப்பட்டது. என்ன செய்வதென்று இருவரும் திகைத்தனர். நிலைமையோ அவசரமாக இருந்தது.


2. கொடுங்கோளுர்க் குமரன்


குமரன்படைக் கோட்டத்தில் இல்லையென்றறிந்த வலியனும், பூழியனும், அருகில் கோட்டை மதிற்புறத்திலிருந்த பூந்தோட்டம் ஒன்றில் நுழைந்தனர். பேசிக் கொண்டே அந்தப் பூந்தோட்டத்தில் சுற்றிச்சுற்றி வந்த அவர்கள் மிக அழகாகக் கட்டப்பட்டிருந்த ஒரு செய்குன்றின் அருகே வந்ததும் அங்கே வியப்புக்குரிய காட்சி ஒன்றைக் கண்டார்கள். அவர்கள் எந்தக் கொடுங்கோளுர்க் குமரனைத் தேடி வந்தார்களோ அந்தக் குமரனே அங்கு பேரழகியான இளம் பெண் ஒருத்தியோடு அமர்ந்து கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தான். வலியனும் பூழியனும் அருகிலிருந்த புதரொன்றில் மறைந்து நின்று கவனிக்கலானார்கள்.

“நாடு முழுவதும் கொள்ளைக்காரர்களைப் பற்றிய பயம் சூழ்ந்திருக்கும் இந்த வேளையில் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத் தலைவர் எத்தகைய காரிய்த்தில் ஈடுபட்டிருக்கிறார் பார்த்தாயா?”