பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21. வெற்றி மங்கலம்

வேளாவிக்கோ மாளிகைக்குள்ளேயே படைத்தலைவன் குமரன் நம்பியை அழைத்துச் சென்றவுடன் அமைச்சர் அழும்பில்வேள் தெளிவான குரலில் அவனிடம் வினாவினார்.

“கடற் கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்களைத் துரத்திக் கொடுங்கோளுரையும், சேர நாட்டுக் கடற்கரை நகரங்களையும் காப்பாற்றுமாறு, உனக்கு நான் கட்டளையிட்டதில் எந்த இடத்தில் எந்த விதத்தில் தந்திரம் இருக்குமென்று நீ அநுமானித்தாய்? உன்னை நான் கருவியாக மட்டுமே பயன் படுத்திக் கொண்டேன் என்று நீ எவ்வாறு கூறமுடியும்?”

“தக்க காரணங்களோடு கூற முடியுமாயினும் - உங்களுடைய இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறுமுன் உங்களை நான் சில கேள்விகள் கேட்க வேண்டும். அதற்கு வாய்ப்பளிப்பீர்கள் அல்லவா?” என்று அமைச்சரைப் பதிலுக்கு வினாவினான் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவன்.

அமைச்சர் அழும்பில்வேள் சில கணங்கள் தயங்கிய பின், “என்னை கேள்விகள் கேட்க உனக்கு உரிமையில்லை என்று நான் கூறமுடியாது. உன் கேள்விகளை நீ இப்போதே என்னைக் கேட்கலாம்” என்றார்.

உடனே அங்கு நிலவிய அமைதியைத் தொடர்ந்து அந்த அமைதியைக் கிழிப்பது போன்ற உரத்த குரலில் குமரன் நம்பி பேசலானான்:

“மகோதைக் கரையில் கடற்கொள்ளைக்காரர்களின் பயம் அதிகமாகியதும் முதன்முறையாக நீங்கள் என்னை இதே வேளாவிக்கோ மாளிகைக்கு அழைத்து அனுப்பினர்களே, அப்போது இங்கே நம்மிருவருக்கும் இடையே நிகழ்ந்த சில உரையாடல்களை இன்று மீண்டும் நினைவூட்ட வேண்டிய நிலையிலிருக்கிறேன்.”