பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

121



என்ன பயனை எதிர்பார்த்துவிடமுடியும் என்பதுதான் தெரியவில்லை.”

“எதிர்பார்த்த பயன் எனக்குக் கிடைத்துத்தான் இருக்கிறது குமரா! கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கடம்பர்கள் சிறைப் பிடித்துக்கொண்டு போனார்கள் என்று கூறியதால்தான் என்னால் இந்த வெற்றியையே அடைய முடிந்தது.”

“இப்படி நீங்கள் கூறுவதன் குறிப்பு என்னவென்று தெரியவில்லையே?”

“இப்போதே தெளிவாக உனக்குத் தெரியத்தான் வேண்டுமென்றால் அதைச் சொல்லுவதற்கு நான் தயங்க வேண்டிய அவசியமில்லை. படைத் தலைவனாகிய உனக்கு இந்தப் போரில் வெற்றி கிடைத்ததற்குக் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியும் ஒரு காரணம் என்பதை நீ என்னிடம் மறுக்க முடியுமா?”

“.....”

அமைச்சருக்கு மறுமொழி கூறமுடியாமல் தயங்கிக் தலைகுனிந்து - முகத்தில் நாணம் கவிழ்ந்து சிவக்க நின்றான் படைத்தலைவன்.

எந்த எல்லையில் நிற்கும்போது அவன் மிகவும் பலவீனமானவனோ அந்த எல்லையில் அவனைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார் அமைச்சர். அதோடு விட்டுவிடவில்லை, அவர் மேலும் தொடர்ந்தார்:

“கடம்பர்களின் கடல் முற்றுகையைத் தகர்ப்பதற்கான ஏற்பாடுகளைக் கலந்து பேசுவதற்காக முதன்முதலாகப் படைத் தலைவன் இங்கு அழைக்கப்பட்டபோது - கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகளிடம் தான் விடைபெற்றுக்கொண்டு வந்தான். அந்த அழகிய பெண்ணிடம் சென்று தன்னுடைய