பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

வஞ்சிமாநகரம்



மாடங்களிலிருந்தெல்லாம் மன்னர்மீதும் படைத் தலைவர் மீதும் படைகள் மீதும் பூமாரி பொழிந்தது. அரண்மனை முன்றில் பெருந்தோப் பெண்டிரும், அந்தப்புர மகளிரும் மலர்தூவி மங்கல தீபம் ஏத்தி ஆரத்தி சுற்றிக்கொட்டி அரசர் பெருமானை வரவேற்றனர்.

அமைச்சர் அழும்பில்வேளைக் கட்டித் தழுவிக்கொண்டார் அரசர். அரண்மனை ஐம்பெருங் குழுவினர், ஆயத்தார் முகத்தில் எல்லாம் அரசர் கோநகர் திரும்பிய மகிழ்ச்சி தெரிந்தது. எங்கும் மலர்ந்த முகங்களே தெரிந்தன. அரசரிடம் கொடுங்கோளுர்ப் படைத்தலைவன் குமரன் நம்பியை அழைத்துச் சென்று அவன் சாதனையை வியந்து கூறிய அமைச்சர் அழும்பின்வேள்,

“இந்தச் சாதனைக்கு ஈடாக நான் அளிக்க இருக்கும் பரிசை மாலையில் அரண்மனைக் கொலுமண்டபத்தில் நிகழ இருக்கும் வெற்றி மங்கல விழாவில் அரசர் பெருமானே இந்த இளம் படைத் தலைவனுக்கு அளிக்கவேண்டும்” - என்றும் அரசரை வேண்டிக் கொண்டார்.

“அவசியம் செய்கிறேன்! இளைஞர்களுக்குப் பரிசளிப்பதென்பது எப்போதும் எனக்கு விருப்பமான செயலே” என்று அரசரும் மகிழ்ச்சியோடு அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்கினார். இவை எல்லாம் கொடுங்கோளுர்ப் படைத் தலைவனுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அவனுடைய உள் மனத்தில் ஒரு கவலையும் இருந்தது. தன் உயிருக்குயிரான அமுதவல்லி என்ன ஆனாள் என்பதை அறியமுடியாத வேதனை அவன் மனத்தை வாட்டியது.

அதை யாரிடமும் வெளியிட்டுப் பேசவும் வாய்ப்பில்லை. பேரரசருடைய வடதிசை வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கோநகரின் அரச வைபவக் கோலாகலங்களின் இடையே அவனுடைய சிறிய மனவேதனையைப் பகிர்த்து கொள்ள அவனுக்கு யாருமே கிடைக்க முடியாதுதான்.