பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வஞ்சிமாநகரம்


 “அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து கொடுங்கோளூரிலேயே பெரிய இரத்தின வணிகர் ஒருவருடைய மகள் அவளென்று தெரிகிறது.”

“உற்றுக்கேட்டால் இன்னும் பல உண்மைகள் தெரியலாம். பொறுத்திருந்து கேட்போம். குமரன் நம்பியும் அவன் காதலியும் இங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பின் நாமும் வேறு வழியாக இங்கிருந்து வெளியேறி - அப்போதுதான் புதிதாக வருகிறவர்கள்போல் கோட்டையில் போய்க் குமரன் நம்பியைச் சந்திப்போம்” என்று அவர்கள் இருவரும் தீர்மானம் செய்து கொண்டார்கள். இப்படியெல்லாம் இவர்கள் நின்று கவனிப்பதை அறியாத குமரன் நம்பி தன் காதலியிடம் உருகி உருகிப் பேசிக் கொண்டிருந்தான்.

“பெண்ணே இன்று எத்தகைய சூழ்நிலையில் இங்கு நான் உன்னைச் சந்திக்க வந்திருக்கிறேன் தெரியுமா? மகோதைக் கரை முழுவதும் கடற்கொள்ளைக்காரர்களைப் பற்றிய அச்சம் பரவியிருக்கிறது. பேரரசரோ, பெரும்படைத் தலைவரோ, தலைநகரில் இல்லை. கொள்ளைக்காரர்கள் பயத்தைத் தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு அமைச்சர் அழும்பில்வேளிடமிருந்து எந்த வினாடியில் எனக்குத் தகவல் வருமென்று சொல்ல முடியாது.”

“எல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் உங்களை ஒரு நாள் ஒரு வேளையாவது சந்திக்காவிட்டால் என்னால் உயிர் வாழ முடியாது.”

“வீரர்களைக் காதலிப்பவர்கள் இவ்வளவு கோழைகளாக இருக்கக் கூடாது பெண்ணே!”

“கோழைத்தனமும் மனம் நெகிழ்ந்து பெருகும் உண்மை அன்பும் எந்த இடத்தில் எந்த அளவுகோலால் வேறுபடுகின்றன என்பதை இன்னும் நீங்கள் உணரவில்லை என்று தெரிகிறது...”