பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

13



“தெரியாமலென்ன? நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் அமைச்சருடைய கட்டளையையோ என் பதவிக்கான கடமைகளையோ நான் புறக்கணிக்க முடியாதவனாக இருக்கிறேன். எந்த ஆபத்தான சூழ்நிலையிலும் என் கைகள் விரைந்து பாதுகாக்க வேண்டிய அழகுச் செல்வம் நீதான் என்பதை நான் உணர்கிறேன். ஆயினும் நடு நடுவே என்னுடைய பதவிக் கடமைகள் என்னால் பாதுகாக்கப்பட வேண்டிய மகோதைக்கரை முழுமையையும் எனக்கு நினைவு படுத்துகின்றன.”

“அதனால் என்ன? உங்கள் பிரியத்திற்குரியவள் என்ற முறையில் தனிப்பட்ட பாதுகாப்பை அடையவில்லையானாலும் உங்களுடைய பாதுகாப்பு எல்லைக்குட்பட்ட மகோதைக் கரையிலிருப்பவள் என்ற முறையிலாவது அது எனக்குக் கிடைக்குமல்லவா?” என்று கூறி அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பு எத்தகைய ஆண்மையையும் பிடிவாதம் உள்ளவனையும் மயக்கிவிட முடிந்ததாக இருந்தது.

“உனக்கு அமுதவல்லி என்று பெயர் சூட்டியவர்களை மறுமுறையும் பாராட்ட வேண்டும் பெண்ணே! அமுதத்தின் அரிய தன்மை உன் புன்னகையிலும் நிறைந்திருக்கிறது. அமுதம் தேவர்களைச் சாவின்றி நித்திய இளமையோடு வாழ வைக்கிறது என்கிறார்கள். உன் புன்னகையோ - என்னைப் போன்ற மனிதனையே நித்திய இளமையோடு வாழ வைத்துவிடும் போலிருக்கிறதே?...”

“திடீரென்று என்னை அளவுக்கு அதிகமாகப் புகழத் தொடங்கிவிட்டீர்களே? ”

“ஒரு பெண்ணை ஓர் ஆண்மகன் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாமென்று இலக்கியத்திலேயே இடமளித்து நலம் பாராட்டலென்று பெயரும் சூட்டியிருக்கிறார்கள்.”