பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

15



விடுவித்துக்கொண்டாள் அமுதவல்லி. அவள் செல்லும் வழியைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவனாகப் படைக் கோட்டத்துப் பாதையில் நடந்தான் குமரன். அவனுடைய நெடி துயர்ந்த தோற்றத்திற்கும் இளமை மிடுக்கு நிறைந்த அந்த வீர கம்பீர நடைக்கும் பொருத்தமாக இருந்தது. சிங்க ஏறு பார்ப்பது போல் அந்த எடுப்பான பார்வையே அவனுக்குப் பெருமிதமளித்தது. அவன் படைக் கோட்டத்திற்குள் நுழையும் போதே வஞ்சிமா நகரிலிருந்து அமைச்சரின் தூதர்கள் வந்திருக்கும் செய்தியைக் காவலர்கள் அறிவித்து விட்டார்கள். அந்தத் தூதர்கள் எங்கே சென்றிருக்கிறார்கள் என்று உடனே அறியத் துடித்தான்.

“சிறது நேரத்தில் மறுபடியும் தங்களை வந்து காண்பதாகக் கூறிச் சென்றார்கள்” - என்றான் கோட்டை வாயிற்காவலன். தூதுவர்கள் வந்த நேரத்தில் தான் படைக்கோட்டத்தில் இல்லாமற் போய்விட்டோமே என்ற கழிவிரக்கமும், அவர்கள் வரவை மீண்டும் எதிர்பார்க்கும் ஆவலுமாகக் காத்திருந்தான். வலியனும் பூழியனும் சிறிது நேரத்திலேயே வந்து சேர்ந்தார்கள். அவர்களை முகமன் கூறி வரவேற்றான் குமரன். “அமைச்சர் பெருமான் தங்களை கையோடு தலைநகருக்கு அழைத்து வரச்சொல்லியிருக்கிறார்” என்று தூதுவர் இருவரும் ஏககாலத்தில் கூறியபொழுது குமரனுக்கு ஒன்றுமே ஒடவில்லை. அந்த அகாலத்தில் அவர்களோடு தலைநகருக்குப் புறப்பட்டால் அமுதவல்லிக்குத் தகவல் தெரியாது போய்விடுமே என்று கவலைப்பட்டான் அவன். ‘மறுநாள் தான் கொடுங்கோளுருக்கு எப்போது திரும்பமுடியுமென்று தெரியாததனால் அநாவசியமாக அவள் பூந்தோட்டத்திற்குத் தேடி வந்து அலைவாளே? தான் தலைநகருக்குப் பயணமாவதை எப்படி அவளுக்கு அறிவிப்பது?’ - என்று வருந்தினான்.

“நீங்கள் இருவரும் விரைந்து சென்று என் வரவை அமைச்சர் பெருமானுக்கு உரைப்பதற்குள் நான் பின் தொடர்ந்து வந்து விடுகிறேன்” என்றான் குமரன். அதைக் கேட்டு வலியனும்