பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வஞ்சிமாநகரம்


 தேவைக்கு அதிகமான விநயத்துடனேயே - அவர்களைக் கேட்டான். உடனே அவர்கள் பேச்சு வேறு விதத்தில் மாறிவிட்டது.

“ஐயா படைத்தலைவரே ! அமைச்சர் பெருமான் எங்கே போயிருக்கிறார் என்று எங்களுக்கு உறுதியாக எதுவும் தெரியாது. தாமாகவே எங்கோ சென்று உண்மை கண்டறியும் நகர் பரிசோதனை நோக்குடன் அவர் புறப்பட்டுப் போயிருக்கிறார். எப்போதுமே உடனிருப்பவர்களாகிய எங்களைக்கூட உடன் அழைத்துச் செல்லவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். நாங்கள், அவர் கொடுங்கோளுருக்குச் சென்றிருக்கலாமோ என்று ஓர் அநுமானத்தில் கூறினோமே அன்றி உறுதி கூறவில்லை. ஒருவேளை அவர் வேறெங்காவது சென்றாலும் சென்றிருக்கலாம்” என்று அந்தப் பேச்சுக்குத் தனிச்சிறப்பு அளிக்காமல் அதைப் பொதுவாக்கி விட்டார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டு மேலும் குழப்பம் அடைந்தான் குமரன். அந்த விநாடியில் ஆந்தைக்கண்ணனைவிடக் கொடியவர்களாகத் தோன்றினார்கள் அவர்கள். மேலும் அதிக நேரம் வேளாவிக்கோ மாளிகை முன்றிலிலேயே அவர்களிடம் பேச்சை வளர்த்துக் கொண்டிராமல் தங்குவதற்காக விருந்தினர் பகுதிக்குச் சென்றான் குமரன். கவலை நிரம்பிய மனநிலையும், உறக்கம் வராத சூழ்நிலையுமாகக் கழிந்த அந்த இரவில் பலமுறை அவன் அமுதவல்வியை நினைவு கூர்ந்தான். அவளைநினைத்த சுவட்டோடு ஆந்தைக்கண்ணனின் கொள்ளை மரக்கலங்கள் கொடுங்கோளுரை நெருங்கி முகத்துவாரத்தில் புகுந்திருந்தால் என்னென்ன பயங்கரங்கள் விளையும் என்று விருப்பமில்லாமலே மனத்தினுள் ஒரு கற்பனை வளர்ந்து கிளைத்தது.