பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. அமைச்சர் கூறிய செய்தி

மறுநாள் வைகரையில் நீராடிக் காலை வேளையில் காத்திருந்த குமரனை அமைச்சரின் தூதுவர்கள் வந்து அழைத்துச் சென்றார்கள். கம்பீரமான தோற்றமும் எதிரே வந்து நிற்பவர்களை ஊடுருவிப் பார்க்கும் கண்களுமாக அமைச்சர் அழும்பில்வேள் பார்வையில் பட்டதுமே குமரன் அவருக்குப் பொருத்தமான வார்த்தைகளைப் பொருத்தமான இடத்தில் பதில் தரவேண்டிய எச்சரிக்கையைத் தன் மனத்திற்கு அளித்தான். வேளாவிக்கோ மாளிகையின் நடு மண்டபத்தில் அங்கும் இங்குமாக உலாவிக்கொண்டே சிந்தித்துக் கொண்டிருந்த அழும்பில்வேள் அதே நிலையில்தான் குமரனை வரவேற்றார்.

“படைத் தலைவரை ஓர் இரவு தாமதிக்க வைத்து விட்டேன். ஒரு வேளை கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத் தலைவருக்கு என்மேல் சிறிது கோபம் கூட உண்டாகியிருக்கும் போல் தோன்றுகிறது......”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மதியூகியான தாங்கள் எதை உடனே செய்ய வேண்டும், எதைச் சிறிது தாமதித்துச் செய்யலாம் என்பதை என்னைவிட நன்கு அறிந்திருப்பீர்கள்.”

இதைக் கேட்டு பதில் ஒன்றும் கூறாமல் அவன் முகத்தையே சில விநாடிகள் மெளனமாகக் கூர்ந்து நோக்கினார் அவர். அவனுடைய அந்தப் புகழ்ச்சி விநயத்தின் அடியாகப் பிறந்த உண்மைப் புகழ்ச்சியா? அல்லது வஞ்சப் புகழ்ச்சியா என்று கொடுங்கோளுர்க் குமரனின் கண்களில் தேடினார். அவர் பின்பு சுபாவமாகக் கேட்கிறவர்போல் அவனைக் கேட்கலானார்:-

“நம்முடைய தூதுவர்கள் கொடுங்கோளுருக்கு வந்திருந்த சமயத்தில் நீயும்கூடப் படைக் கோட்டத்தில் இல்லை போலிருக்கிறது.”

“ஆம்! பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காகச் சென்றிருந்தேன்.”