பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

25



என்பது புரியாமல் தவித்தான். எதற்காகச் சுற்றி வளைத்து அந்தப் பேச்சை இழுக்கிறார் என்பது புரிந்தது போலவும் இருந்தது. அதே சமயத்தில் அவர் ஒருவித உள்ளர்த்தமும் இல்லாமல் சுபாவமாகப் பேசுவது போலவும் இருந்தது. எனவே தடுமாற்றம் தெரியாதபடி அவருக்கு முன் நிற்க இயலாமல் தவித்தான் அவன். அவரோ பேச்சை மீண்டும் இயல்பாகத் திருப்பினார்.

“எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால் அத்தகைய அழகிய பூங்காக்களும், பொழில்களும், வாவிகளும், நீரோடைகளும் நிறைந்த கொடுங்கோளூர் நகரத்தை நாம் உயிரைக் கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். கொடுங்கோளூர் நகரில்தான் சேர நாட்டிலேயே புகழ்பெற்ற இரத்தின வணிகர்களெல்லாரும் இருக்கிறார்கள். இந்தச் சேரநாட்டிலேயே அழகான பெண்களும் கொடுங்கோளுரில்தான் இருக்கிறார்கள். அது மட்டும் அன்று குமரன் நம்பி ! உன்னைப் போல் வாளிப்பான உடற்கட்டுள்ள சுந்தர வாலிபர்களும் கூடக் கொடுங்கோளுரில்தான் இருக்கிறார்கள்” என்று கூறி நிறுத்திவிட்டு அந்த வார்த்தைகள் கொடுங்கோளுர்க் குமரன் நம்பியை எந்த அளவுக்கு நிலை தடுமாற வைத்திருக்கின்றன என்று கவனிக்கத் தொடங்கினார் அழும்பில்வேள். அவருடைய சொற்களைத் தாங்குவதைக் காட்டிலும் பார்வையைத் தாங்குவதைக் கடுமையாக உணர்ந்தான் குமரன் நம்பி.

“அமைச்சர் பெருமானுக்கு என்ன காரணத்தினாலோ இன்று என்மேல் அளவுகடந்த கருணை பிறந்திருக்கிறது. என்னையும் ஒரு பொருட்டாக மதித்து புகழுவதைக் கேட்டு வெட்கமாக இருக்கிறது.”

“பொதுவாக வீரர்கள் எதற்கும் வெட்கப்படக் கூடாதென்று சொல்லுவார்கள். வீரர்கள் நாணமும் வெட்கமும் படக் கூடாதென்றால் வீரர்களுக்கெல்லாம் தலைவனாகிய படைத்தலைவன் நிச்சயமாக வெட்கப்படக் கூடாது.”