பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வஞ்சிமாநகரம்



“அமைச்சர் பெருமான் என்னைக் கூப்பிட்டனுப்பிய கட்டளையை அறிந்து கொள்ள மிகமிக ஆவலாயிருக்கிறேன்.”

“அதை நான் சொல்லித்தான் இனி நீ அறிந்துகொள்ள வேண்டும் என்பதில்லையே? கொள்ளைக் கூட்டத்தாரிடம் இருந்து மகோதைக் கரை நகரங்களைக் காக்கவேண்டும். நேற்றிரவு நான் இங்கிருந்து கொடுங்கோளுர்வரை மாறு வேடத்தில் நகர் பரிசோதனைக்காகச் சென்று வந்தேன். உன்னை இங்கே வரச் சொல்லிவிட்டு - உனக்குத் தெரியாமல் நான் கொடுங்கோளுர் சென்றதற்காக நீ என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். நான் அனுப்பியிருந்த துரதர்களோடு கூடவே நீயும் வந்திருந்தால் இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டேன் நான். விநாடிக்கு விநாடி கொடுங்கோளுரைப் பற்றிக் கவலைப் படும்படியான செய்திகள் வந்துகொண்டே இருந்தன. அதற்கேற்றார்போல் நீயும் அங்கிருந்து வராமற்போகவே எனக்கு ஒன்றும் புரியவில்லை. தலைநகரிலிருந்து கொடுங்கோளுருக்கு வரும் பெருஞ்சாலையில் நான் செல்லவில்லையாதலால் உன்னையும் இடை வழியில் சந்திக்க வாய்ப்பில்லை. கொடுங்கோளுருக்கு நான் போயிருந்த போது கேள்விப்பட்ட ஒரு செய்தி என்னைப் பெருங் கலக்கத்துக்கு ஆளாக்கிவிட்டுவிட்டது-”

“அப்படி என்ன பரபரப்பான செய்தி அது? நேற்று முன்னிரவில்தானே நானும் அங்கிருந்து புறப்பட்டேன்? எந்தச் செய்தியையும் நான் கேள்விப்படவில்லையே?”

“என்ன செய்வது? நீ அங்கிருந்து புறப்பட்டபோது அப்படிப்பட்ட செய்தி எதைப்பற்றியும் நீ கேள்விப்பட நேரவில்லை; நான் போயிருந்தபோது கேள்விப்பட நேர்ந்து விட்டது.”

“என்ன நடந்தது கொடுங்கோளுரில்?"