பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

29



இப்போது உனக்குக் கட்டளை இடுகிறேன். உனக்கு உதவியாயிருக்கவும் செய்திகளை அவ்வப்போது நாம் அறியச் செய்யவும் இந்த மாளிகையின் ஊழியர்களான வலியனும் பூழியனும் உன்னுடன் கொடுங்கோளூர் வருவார்கள். அவர்களையும் உடனழைத்துக்கொண்டு நீ கொடுங்கோளுருக்குப் புறப்படலாம்” என்று கட்டளையிட்டார் அமைச்சர்.

குமரன் எதற்காகவோ தயங்கி நின்றான். அமைச்சர் அழும்பில்வேளை அந்த விநாடியில் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னோடு வலியனையும் பூழியனையும் எதற்காகக் கொடுங்கோளுருக்கு அனுப்புகிறார் என்பதே அவனுக்குச் சந்தேக மூட்டியது. வேளாவிக்கோ மாளிகைக்குச் சேரநாட்டின் அரசதந்திர மாளிகை என்று மற்றொரு பெயர் உண்டு. மாளிகையில் உருவாகிற முடிவுகளுக்கும், பின்னால் ஏதாவதொரு அரச தந்திர நோக்கம் நிச்சயமாக இருக்கும் என்பதை அவன் அறிவான். தன்னை நிதானம் செய்து கொண்டு அமைச்சர் பெருமானிடம் மறுபடி பேச அவனுக்குச் சில விநாடிகள் பிடித்தன.

“ஐயா ! கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்திலுள்ள வீரர்களையும் கடற்படையினரையும் துணைக் கொண்டே ஆக வேண்டிய பாதுகாப்புக் காரியங்களை நான் கவனித்துக் கொள்ள முடியும். தங்களுக்கு எப்போதும் உறுதுணையாயிருக்கும் ஊழியர்களை என்னோடு அனுப்பினால் தாங்கள் சிரமப்பட வேண்டியிருக்குமோ?”

“அப்படி ஒன்றும் சிரமமில்லை ! என் அந்தரங்க ஊழியர்களான வலியனும் பூழியனும் உன்னோடு துணைவராமல் இங்கு தங்கினால்தான் கொடுங்கோளுர்ச் செய்திகள் தெரியாமல் நான் சிரமப்படுவேன். அந்தச் சிரமம், சற்றுமுன் கொடுங்கோளூர் இரத்தின வணிகரின் மகள் கடற்கொள்ளைக்காரர்களால் கடத்திக் கொண்டு போகப்பட்டாள் என்ற செய்தியைக் கேட்டவுடன் நீ அடைந்த சிரமத்தைப் போலிருக்கும்” என்று