பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

31



கொடுங்கோளூர் முழுவதும் கொள்ளைக்காரர்களைப் பற்றிய பயம் பரவியிருப்பதாக வழிப்போக்கர்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. வழிப்போக்கர்கள் சிலரிடம் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைப் பற்றிக் கேட்டான் குமரன்நம்பி. கொடுங்கோளூர் நகரிலும் அந்தப் பெண்காணாமற் போய்விட்ட செய்தி பரபரப்பை உண்டு பண்ணியிருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். குமரன் இவ்வாறு வழியிடை எதிர்ப்பட்டவர்களை விசாரித்த போதெல்லாம் வலியனும் பூழியனும் உள்ளூர நகைத்துக் கொண்டார்கள். “அந்த ஆந்தைக்கண்ணனையும் அவன் குலத்தினரையும் பூண்டோடு வேரறுப்பேன்” என்று வஞ்சினம் கூறினான் குமரன். தலைநகருக்கும் கொடுங்கோளுருக்கும் இடைப்பட்ட சிற்றுார்களிலும் அம்பலங்களிலும் கூடப் பயமும் பரபரப்பும் பரவியிருந்தன.

கதிரவன் மலைவாயில் விழுவதற்கு முன்னதாகவே அவர்கள் கொடுங்கோளூரை அடைந்து விட்டார்கள். படைக் கோட்டத்தில் இருந்த வீரர்கள் யாவரும் பொன்வானியாற்று முகத்துவாரத்திலும் கடற்கரையோரப் பகுதிகளிலும் காவலுக்கு அனுப்பப்பட்டிருந்ததனால் கோட்டத்தில் வீரர்கள் அதிகமாக இல்லை. இரண்டொரு காவலர்களும் மிகச்சில வீரர்களுமே இருந்தனர். அவர்களைக் கேட்டபோதும் “கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகள் அமுதவல்லி காணாமற்போனது உண்மையே” - என்று தெரிவித்தார்கள். அதே சமயத்தில் இன்னோர் உண்மையோடு முரண்படுவதாகவும் இருந்தது இந்தச் செய்தி.

கடலில் கொள்ளைக்காரர்களின் மரக்கலங்கள் முதல் நாள் மாலை எந்த இடத்தில் நின்றிருந்தனவோ அந்த இடத்திலிருந்து முன்னேறவோ, பின் வாங்கவோ இல்லை என்று கூறினார்கள். அமுதவல்லி காணாமற் போய்விட்டாள் என்ற செய்தியும் கொள்ளை மரக்கலங்கள் கடலில் அதே இடத்தில்தான் இருக்கின்றன என்பதையும் இணைத்துப் பார்த்தபோது