பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வஞ்சிமாநகரம்


 ஒன்றோடொன்று பொருந்தவில்லை. ஆனால் சிந்திப்பதற்கு ஒரு காரணமும் இருந்தது. முகத்துவாரத்திலிருந்து நகருக்குள் வர ஏற்றபடி பொன்வானியாற்றின் கால்வாய் ஒன்று இரத்தின வணிகரின் மாளிகைப் புறக்கடையை ஒட்டிச் செல்கிறது. அந்தக் கால்வாய் வழியே சிறு மரக்கலங்கள், பாய்மரப் படகுகள் ஊருக்குள் போக்கு வரவு உண்டு என்பதை நினைவு கூர்ந்தான் குமரன்.

ஒருகணம் இரத்தின வணிகளின் மாளிகைக்கே நேரே சென்று நிலைகளை அறியலாமா என்று தோன்றியது அவனுக்கு. அடுத்த கணம் அப்படிச் செய்யப் புகுவது சரியில்லை என்று தோன்றியது. அமைச்சர் பெருமானால் தன்னோடு அனுப்பப்பட்டிருக்கும் வலியனும் பூழியனும் தான் எங்கு சென்றாலும் உடன் வருவார்கள் என்பதும் அவன் அப்படிச் செல்வதற்கு ஒரு தடையாயிருந்தது. மேலும் கொடுங்கோளுர் நகரம் முழுவதுமே கடற் கொள்ளைக்காரர்களைப் பற்றிய பரபரப்பில் ஆழ்ந்திருக்கும் போது படைக்கோட்டத்துத் தலைவனாகிய தான் இரத்தின வணிகருடைய மாளிகையை மட்டும் தேடிச் செல்வது பலருக்குச் சந்தேகங்களை உண்டாக்கக்கூடும் என்றும் அவனால் உணர முடிந்தது.

அந்த வேளையில் அவனுக்கு உண்டாகிய சீற்றம் உடனே செயலாற்ற முடியாத சீற்றமாக இருந்தது. எப்படியும் அன்றிரவு தேர்ந்தெடுத்த வீரர்கள் சிலரோடு படகில் கொள்ளை மரக்கலங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைவதென்று திட்டமிட்டான் அவன். கடம்பர்கள் என்னும் கொள்ளைக்காரர் கூட்டத்தை நிர்மூலமாக்கிவிடவேண்டும் என்னும் அளவிற்கு அவனுள் ஆத்திரம் நிறைந்திருந்தது. எங்கும் பயமும் பரபரப்பும் நிறைந்திருந்த சூழ்நிலையில் கொடுங்கோளுர் நகரமே உறங்கும் நள்ளிரவு வேளையில் கடற் பிரவேசம் செய்வதென்று தீர்மானித்தான் குமரன் நம்பி, வலியனையும் பூழியனையும் கூட இயன்றவரை தவிர்க்க விரும்பினான் அவன். அதனால் அவர்கள்