பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

39



வேறு சில மரக்கலங்களிலும் அவன் ஏறி இறங்கினான். ஒரு பெரிய முற்றுகைக்கும், கொள்ளையிடலுக்கும் வேண்டிய எல்லா ஏற்பாடுகளுடனும் அந்தக் கலங்கள் வந்திருப்பது விநாடிக்கு விநாடி உறுதிப்பட்டது. அவன் மனதில் ஆள் வலிமையும், ஆயுதங்களின் வலிமையும் கூட அவர்களிடம் மிகுதியாய் இருப்பதை அவன் அங்கே தெளிவாகக் கண்டுணர்ந்தான். ஒற்றறிவதற்காக ஏறி இறங்கிய மரக்கலம் ஒன்றில் காவலுக்கிருந்த கொள்ளை வீரர்கள் இருவருடைய உரையாடலை அவன் ஒட்டுக் கேட்க நேர்ந்தது.

“இந்த முற்றுகையினால் நமக்குப் பெரும் பயன் வரப் போகிறது. நல்ல வாய்ப்பு இது. சேர வேந்தர் செங்குட்டுவர் வட திசையில் குயிலாலுவம் வரை படைத் தலைவர்களுடனும், சேர சைன்யத்தின் பெரும்பான்மையான வீரர்களுடனும் படையெடுத்துச் சென்றிருக்கிறார். கொடுங்கோளூரிலோ வஞ்சிமா நகரத்திலோ வீரர்கள் அதிகமில்லை. இந்த இரண்டு பெருநகரங்களிலும் உள்ள செல்வங்களைக் கொள்ளையிட இதைவிடப் பொன்னான சமயம் நம் தலைவருக்கு வாய்க்காது” என்றான் முதற் கடம்பன்.

“ஆம்! நேற்றிரவுகூட நம்மவர்களிற் சிலர் கடலிலிருந்து பொன்வானியாற்று முகத்துவாரத்தின் வழியே கொடுங்கோளுரின் நிலையை ஒற்றறிவதற்காகச் சென்று வந்தார்களாமே? எப்படி இருக்கிறது நிலைமை?” என்று முதல்வனைக் கேட்டான் இரண்டாங் கடம்பன்.

இந்த இடத்தில் குமரன்நம்பியின் புலன்கள் கூர்ந்து ஒன்றாகி அந்தப் பேச்சை உற்றுக் கேட்டன. அப்படி பொன்வானி முகத்துவாரத்தின் வழியே ஒற்றறியச் சென்ற கடம்பர் குழுவினரால்தான் அமுதவல்லி சிறைப்பட்டிருக்க வேண்டு மென்று அவனால் யூகிக்க முடிந்தது.