பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. குமரன்நம்பியின் திட்டம்

அன்று நள்ளிரவில் உடன் வந்த வீரர்களை நடுக்கடல் தீவில் காத்திருக்கச் செய்துவிட்டுக் கடம்பர்களின் கொள்ளை மரக் கலங்களில் புகுந்து உளவறியச் சென்ற குமரன்நம்பி திரும்பி வரத் தாமதமான ஒவ்வொரு விநாடியும் காத்திருந்த கொடுங்கோளுர்ப் படைக்கோட்டத்து வீரர்கள் கணக்கற்ற சந்தேக நினைவுகளால் குழப்பமடையலானார்கள். ஒரு வேளை குமரன் நம்பி கடம்பர்களின் கையில் சிக்கிச் சிறைப்பட்டு விட்டானோ என்ற சந்தேகமும் இடையிடையே மனத்தில் தோன்றி அவர்களை பயமுறுத்தியது. நல்ல வேளையாக மேலும் அவர்களுடைய பொறுமையைச் சோதிக்காமல் குமரன் நம்பி திரும்பி வந்து சேர்ந்தான்.

வந்ததும் வராததுமாக, “உடனே வந்தது போலவே கரைக்குத் திரும்பி விடுவோம்! கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்திற்குச் சென்று மற்றவற்றைச் சிந்திப்போம்” என்று அவர்களை விரைவு படுத்தினான் குமரன் நம்பி அவன் அவ்வாறு விரைவு படுத்துவதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டுமென்று உணர்ந்தவர்களாக அவர்களும் உடனே அவனோடு படகேறிப் புறப்பட்டனர். படகு கடலின் அலைகள் நிறைந்த பகுதியை எல்லாம் கடந்து பொன்வானி முகத்துவாரத்தை அடைகின்றவரை அவர்கள் ஒருவரோடொருவர் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை.

கரை சேர்ந்தபின் விடிவதற்குக் கொஞ்ச நேரமே இருந்தது. குமரன்நம்பி உட்பட யாவருமே சோர்வடைந்திருந்தார்கள். பேசி முடிவு செய்ய வேண்டியவற்றைக் காலையில் பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு அப்போது தோன்றியது. உறங்குகின்ற மனநிலை யாருக்குமே இல்லை என்றாலும் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியிருந்தது. மறுநாள் பொழுது புலர்ந்தது. படைக்கோட்டத்து வீரர்கள் கலந்து பேசினார்கள். குமரன் நம்பியின் மனம் கொள்ளைக்