பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

41



காரர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அமுதவல்லியின் நிலை என்னவோ, ஏதோ என்பதைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்தாலும் வீரர்களிடையே அவன் சில திட்டங்களைக் கூறலானான்.

“பலமுறை நம்முடைய பெருமன்னர் செங்குட்டுவரால் ஓட ஓட விரட்டப்பட்டிருக்கும் இந்தக் கொடிய கடற் கொள்ளைக்காரர்களான கடம்பர்கள் மறுபடி சமயம் பார்த்து முற்றுகையிட்டிருக்கிறார்கள். நம் மன்னரும் சேர நாட்டுப் பெரும் படைகளும் வடக்கே படையெடுத்துச் சென்றிருப்பதை அறிந்தே கொள்ளைக்காரக் கடம்பர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். கொடுங்கோளுர்ப்படைக் கோட்டத்திலோ நாம் சிலர்தான் இருக்கிறோம். தலைநகரில் வேளாவிக்கோ மாளிகையிலிருந்து தம்மை வந்து சந்திக்கும்படி அமைச்சர் அழும்பில்வேள் எனக்குக் கட்டளையிட்டிருந்தார். அவரைப் போய்ப் பார்த்து வந்தேன். கடற்கரையிலும், பொன்வானி முகத்துவாரத்திலும் கொடுங்கோளூர் நகரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு என்னை அமைச்சர் பெருமான் வேண்டிக் கொண்டிருக்கிறார். மேலும்...”என்று சொல்லிக் கொண்டே வந்த குமரன் நம்பி தயங்கிப் பேச்சை நிறுத்தினான்.

“மேலும் என்ன?...ஏன் சொல்ல வந்ததைப் பாதியிலேயே நிறுத்திவிட்டீர்கள்?” என்று வினவினான் படைக் கோட்டத்தைச் சேர்ந்த வீரனொருவன். ஆனால் குமரன் நம்பியோ தன் தயக்கத்தை தொடர விட்டவனாக மேலும் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் சொல்வதற்கிருந்த செய்தியோ கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லி காணாமற்போனதைப் பற்றியது. அதைத் தானே படை வீரர்களிடம் தன் வாய்மொழியினால் சொல்லி விவரிப்பதற்கு அவன் மனம் வேதனைப்பட்டது. என்ன காரணத்தினாலோ இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி கொடுங்கோளுரில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கும் என்பதை அவன் மனம் நம்ப மறுத்தது.