பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

43



மட்டுமே நேருக்கு நேர் எதிர்ப்பதென்பது சாத்தியமில்லை. ஆகவே சாதுர்யத்தால் எதிரிகளை மடக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதை குமரன் நம்பி நன்கு உணர்ந்திருந்தான்.

திடீரென்று இருந்தாற்போலிருந்து நண்பர்களிடம் விநோதமான வேண்டுகோளை விடுத்தான்.

“சேர நாட்டு அரச முத்திரையாகிய விற்கொடி இலச்சினையோடு கூடிய புத்தம் புதுக் கொடித் திரைச்சீலைகள் சில நூறு இப்போது உடனே வேண்டும். நமது சூழ்ச்சியை அவை மூலமே தொடங்க முடியுமென்று தோன்றுகிறது.”

“படைத் தலைவரே! உங்கள் வேண்டுகோள் விநோதமாக இருக்கிறது. வலிமையான ஆட்கள் இருந்தாலே கொடியவர்களான கடம்பர்களை வெற்றி கொள்வது அருமை. நீங்களோ சேர நாட்டுக் கொடிச் சீலைகளைக் கொண்டே அவர்களை வென்றுவிட நினைக்கிறீர்கள்” என்று சந்தேகமும் தயக்கமுமாக ஒரு வீரனிட்மிருந்து படைத் தலைவன் குமரன் நம்பிக்கு மறுமொழி கிடைத்தது.

குமரன் நம்பி அதைக்கேட்டு மனந்தளரவோ தயங்கவோ செய்யாமல் சிரித்த முகத்துடனேயே அந்த வீரனுக்கு மறுமொழி கூறலானான். “மரத்தை நோக்கிக் கற்களை எறிவோம். கற்களால் மாங்காய்கள் உதிருமானால் நமக்குப் பயன்தானே? காய்கள் விழாவிட்டால் நமக்கென்ன? மறுபடி வேறு கற்களை எறிவோம். அரச தந்திரச் சூழ்ச்சிகள் யாவுமே இப்படித்தான். நாம் நினைக்கிறபடியே தான் முடியவேண்டும் என்று திட்டமிட இயலாது. ஆனால் நாம் நினைக்கிறபடியேதான் முடியவேண்டுமென்ற திட நம்பிக்கையுடனேயே செயலைத் தொடங்க வேண்டும். அதில் எள்ளளவும் தளர்ச்சியிருக்கக் கூடாது.”

“மாங்காய்கள் விழுவதற்குப் பதிலாக நாம் எறிந்த கற்களே நம்மேல் திரும்பி விழுவதுபோல் நேர்ந்துவிட்டால் என்ன செய்வது?” என ஒரு வீரன் கேட்டான்.