பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வஞ்சிமாநகரம்



யிட்டிருந்த நடுக்கடல் தீவை நோக்கி கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்து வீரர்களின் படகுகள் விரைந்து செல்லத் தொடங்கின. குமரன் நம்பியின் படகு தலைமை தாங்கிக் செல்வதுபோல் முன்னால் சென்றது. ஆனால் கடலில் மேலே செல்லச் செல்லல குமரன் நம்பியின் மனத்தில் குழப்பம் அதிகமாகியது. தான் வழிதவறிவிட்டோமா அல்லது இருளில் கடம்பர்களது மரக்கலங்கள் நிற்பது தெரியவில்லையா என்பது புரியாமல் திகைத்தான் அவன்!

நடுக்கடல் தீவை நெருங்க நெருங்க அவன் சந்தேகம் அதிகமாகியது. பார்வை எட்டுகிற தொலை வந்ததும் அவன் சந்தேகம் தீர்ந்துவிட்டது. கடம்பர்களின் மரக்கலங்களில் ஒன்றுகூட முதல்நாள் நின்றதுபோல் அந்தத் தீவை ஒட்டி நிற்கவில்லை. தீவு சூனியமாயிருந்தது. கரையிலும் மனித சஞ்சாரமே இல்லை. இப்போது குமரன் நம்பியின் நிலை இரண்டுங்கெட்ட தன்மையில் ஆகிவிட்டது. ‘கடம்பர்கள் தங்கள் மரக்கல முற்றுகையை இரவோடிரவாக இடம் மாற்றிவிட்டார்கள் என்று முடிவு செய்வதா? அல்லது மரக் கலங்களைத் தீவின் மறுபக்க மறைவில் நிறுத்திவிட்டுக் கலங்களில் இருந்தவர்கள் மட்டும் - தீவில் இறங்கி எதிரிகளைத் திடுமென்று தாக்க மறைந்திருக்கிறார்களா? ஒன்றும் புரியவில்லையே?’ என்று மருண்டான் குமரன் நம்பி. தீவை நெருங்கிக் கரையை அணுகவும் அவனுக்குத் தயக்கமாக இருந்தது. மரக்கலங்களும் கொள்ளைக்காரர்களும் எங்கே மாயமாக மறைந்து போனார்கள் என்பதும் மர்மமாயிருந்தது. ஒன்றும் செய்யத் தோன்றாமல் எல்லாப் படகுகளையும் நடுக் கடலிலேயே நிற்கச் செய்வதற்குரிய ஏற்பாட்டை மேற்கொண்டான் அவன்.

“என்ன ஆயிற்று? நேற்று இரவும், அதற்கு முந்திய தினமும் மலைமலையாக இந்த இடத்தில் நின்ற கொள்ளை மரக் கலங்களைத் திடீரென்று காணவில்லையே?” என்று திகைப்போடு தங்கள் படைத்தலைவனை நோக்கினார்கள் உடனிருந்த வீரர்கள்.