பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

49



கடம்பர்கள் முரட்டு இனத்தவராயினும் கடற்கொள்ளைக்காரர்களுக்கே உரிய சூழ்ச்சிகள் யாவும் நிறைந்தவர்கள். மறைவதுபோல் மறைந்து தோன்ற மாட்டார்கள் என்று நம்பியிருக்கிற வேளையில் திடீரென்று வதைக்கும் கொடிய காரியத்தை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியுமில்லை. படகுகளோடு பின் வாங்குவதே நல்லதென்று குமரனுக்குத் தோன்றியது. எல்லாப் படகுகளையும் பின்வாங்கும்படி ஆணையிடும் எண்ணத்தோடு அவன் ஏதோ கட்டளையிட வாய் திறந்தபோது, உடனிருந்த வீரன் ஒருவன் “அதோ, அதோ!” என்று வேறோர் திசையைச் சுட்டிக் காட்டினான். எல்லார் கண்களும் ஆவலோடு அத்திசையில் திரும்பின.


9. கடம்பர் சூழ்ச்சி

உடனிருந்த வீரன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்த குமரன் நம்பி திடுக்கிட்டான். கடம்பர்கள் இன்ன இடத்தில் இவ்வளவு கப்பல்களோடு முற்றுகை இட்டிருக்கிறார்கள் என்பதாக முந்தைய தினங்களில் நேரில் கண்டறிந்து உறுதி செய்த திட்டமெல்லாம் பொய்யாகும்படி அவர்கள் வேறொரு திசையில் முன்னேறி நகரத்தை ஒட்டிய கடற்பகுதிக்குச் சென்றிருப்பது தெரியவந்தது. எதிர்பாராத விதமாகக் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட இந்த உண்மை அதிர்ச்சியை அளிப்பதாய் இருந்தது. தன்னுடைய முன்னேற்பாடும் திட்டங்களும் இப்போது காலங் கடந்தவையாயும் பயனற்றவையாயும் ஆகிவிட்டதை அவன் உணர்ந்தான். சுற்றி இருந்த அனைவர் முகத்திலும் கலவரம் தெரிவதையும் - கலக்கம் படர்வதையும் அவன் உணர்ந்தான்.

இரவு முழுவதும் கண்விழித்து நுணுக்கமாகவும் அரச தந்திரத்தோடும் செய்த ஏற்பாடுகள் எல்லாம் வீணாகிவிட்டன என்றெண்ணும்போது வேதனையாய் இருந்தது. கடற்