பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

51



“படைத் தலைவர் எப்படிக் கட்டளையிடுகிறாரோ அப்படிச் செய்ய சித்தமாயிருக்கிறோம்” என்றார்கள் அவர்கள். உடனே எல்லாருமாகச் சேர்ந்து விரைந்த முடிவு ஒன்றிற்கு வந்தனர்.

கடம்பர்கள் அப்போது கடலில் தங்கள் மரக்கலங்களை நிறுத்தியிருந்த இடம் மகோதைக் கரையிலே பொன்வானி முகத்துவாரத்துக்கு அருகில் இருந்தாலும் விடிவதற்குள் இருளோடு இருளாக அந்த இடத்திற்கே சென்று அவர்களையும் அவர்களுடைய கலங்களையும் வளைத்துவிடுவது என்று முடிவு செய்தனர். ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சூழ்ச்சியை நிறைவேற்றி முடிப்பது என்ற உறுதி பிறந்த பின் படகுகள் மறுபடி விரைந்தன. மகோதைக் கரையிலே கொள்ளை மரக் கலங்கள் நின்ற திசையைநோக்கி இந்தப் படகுகள் விரைந்த போது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மித்திரபேத சூழ்ச்சியே இவர்கள் மனதில் நிறைந்திருந்தது.

ஆனால் காரிய அவசரத்திலும், திடீரென்று எதிரிகளின் கலங்கள் இடம் மாறியிருந்ததைக் கண்டதிலும் பரபரப்பு அடைந்திருந்த அவர்கள் சிலவற்றை நிதானமாகச் சிந்திக்கத் தவறியிருந்தார்கள். தீப்பந்தங்களை எல்லாம் அணைத்திருந்ததனாலும், கொள்ளை மரக்கலங்கள் நின்றிருந்த பகுதி சற்றே தொலைவிலிருந்ததனாலும் அருகில் நெருங்கிய பின்புதான் சில உண்மைகள் அவர்களுக்குப் புரியவரலாயின. கடம்பர்களின் தலைவனான ஆந்தைக்கண்ணன் எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தான் என்பது அருகில் நெருங்க நெருங்கத்தான் தெரிந்தது.

கொள்ளை மரக்கலங்களில் உள்ளவர்கள் யாவரும் விழிப்போடிருந்தனர். கலங்களெல்லாவற்றையும் வட்டவடிவில் சக்கரவியூகமாக ஒரு கோட்டைபோல் நிறுத்தியிருந்தனர். நடுவில் நீர் இடைவெளிபட மரக்கலங்களையே வட்டவடிவாக நிறுத்தி ஒரு கடற்கோட்டை கட்டினாற்போல் செய்து ஒவ்வொரு தளத்திலும் வீரர்கள் காவலுக்கு வேறு நின்றார்கள். நடுக்கடலில்