பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

53



நிறுத்தப்பட்டார்கள். வாயில் கள் நாற்றமும், உருண்டு உருண்டு விழிக்கும் குரூரமான ஆந்தைக்கண்களோடு கூடிய முகமும், பூதாகாரமான உயர்ந்த தோற்றமுமாக அந்தக் கொள்ளைக்காரர் தலைவன் அவர்களுக்குத் தோற்றமளித்தான். அவனைக் கண்டபோது கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்தவர்களது நெஞ்சு ‘திக் திக்’ என்று அடித்துக்கொண்டது. அவனோ பாதி கிறங்கிய விழிகளுடன் தளத்தில் வந்து நின்று ஏதோ புழுப் பூச்சிகளைப் பார்ப்பதுபோல் அவர்களைப் பார்க்கலானான். யாரையுமே கருணை நோக்கோடு பார்க்க இயலாதபடி பிறவி இயல்பிலேயே கொடூரமாக அந்தக் கண்களைப் படைத்திருக்க வேண்டும் கடவுள். அந்தப் பேருருவம் வந்துநின்ற விதத்திலேயே கப்பலின் தளம் அதிர்ந்தது. இவர்களைப் பார்த்துக் குரூரமாக ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்தான் அவன்.

“இவர்கள் சேரநாட்டுக் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத்து வீரர்கள். நமது மரக்கலங்களை நோக்கிப் படகுகளில் வந்தார்கள், கைப்பற்றினோம்” என்பதாக ஒரு கொள்ளைக்காரக் கடம்பன் தங்கள் தலைவனான ஆந்தைக்கண்ணனிடம் இவர்களைப்பற்றி எடுத்துக் கூறினான்.

“தெரிகிறது ! தெரிகிறது ! இன்றுள்ள சூழ்நிலையில் இவ்வளவு குறைந்த தொகையுள்ள வீரர்கள் சேரநாட்டிலிருந்துதான் வந்திருக்க முடியுமென்று நன்றாகத் தெரிகிறது. பாவம், சேர நாட்டுப் படை முழுவதும் வடதிசைப் படையெடுப்பிற்குச் சென்றிருக்கிறதுபோல் தோன்றுகிறது; நாம் கொடுத்து வைத்தவர்கள். இந்த வேளை நமக்குத்தான் நன்மையாகவும் சாதகமாகவும் வாய்த்திருக்கிறது. கொடுங்கோளுரையும் வஞ்சிமாநகரையும் ஏன் மகோதைக் கரையிலுள்ள செழிப்பு வாய்ந்த எல்லா நகரங்களையும் - நாம் கொள்ளையிடுவதற்கு இதைவிட வாய்ப்பான நேரம் வேறு கிடைக்க முடியாது. இரத்தின வணிகர்களையும், முத்து வணிகர்களையும் தேடிப் பிடித்துக் கொள்ளையிட வேண்டும்”