பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வஞ்சிமாநகரம்



என்று கேட்க அருவருப்பான கடுங்குரலில் முழங்கினான் ஆந்தைக்கண்ணன்.

குமரன் நம்பி மனம் கொதிக்கப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு நின்றான். அவனோடு உடனிருந்த சேரநாட்டு வீரர்கள் தங்கள் தலைவனான அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனோ எதுவுமே பேசவில்லை. உள்ளே பலவிதமான சிந்தனைகளால் அவன் மனம் தவித்துக் கொண்டிருந்தது. வேளாவிக்கோ மாளிகையின் நடுக்கூடத்தில் வைத்து அமைச்சர் அழும்பில்வேள் தன்னிடம் கூறியவற்றை எல்லாம் நினைவு கூர்ந்தான் அவன். அவ்வளவு திட்டமும் இப்போது இந்த விநாடியில் பாழாகிவிட்டதை உணர்ந்து அவன் மனம் கொதித்தது.

அந்த இரவில் தங்களிடம் சிறைப்பட்டு விட்ட குமரன் நம்பி முதலிய கொடுங்கோளுர் வீரர்களைக் கப்பலின் கீழ்த்தளத்து இருளில் கொண்டுபோய் அடைத்தார்கள் கடம்பர்கள். அதிலிருந்து எப்படித் தப்புவது என்ற வழியே தோன்றாமல் சேர நாட்டு வீரர்கள் இருளில் தவித்தார்கள். அவர்களுடைய மனத்தில் கடம்பர்கள் தங்களிடம் அகப்பட்டுக் கொண்டவர்களை எப்படி எப்படி எல்லாம் சித்திரவதை செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தவை எல்லாம் நினைவுக்கு வந்து பயமுறுத்தின.

குமரனுடைய உள்ளத்திலே எவ்வளவோ கவலைகள் இருந்தாலும் ஒரு சிறு நம்பிக்கையும் மின்னி மின்னி மறைந்தது. கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லி கடம்பர்களால் சிறைப்படுத்தப்பட்டிருந்தால் இதே மரக்கலத்திலோ, அல்லது இங்குள்ள வேறு மரக்கலங்களிலோ தேடி இருப்பிடம் அறிய முயலலாம் என்பதுதான் அந்த நம்பிக்கையாயிருந்தது. மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவர்கள் மறுபடியும் கப்பலின் தளத்தில் ஆந்தைக்கண்ணனுக்கு முன்பு கொண்டு போய் நிறுத்தப்பட்டார்கள். அவர்களில் குமரன்