பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

55



நம்பியின் தோற்றத்தைக் கொண்டும், மற்றவர்கள் அடிக்கடி அவன் முகக் குறிப்பையே எதிர்பார்த்ததில் இருந்தும், அவன்தான் குழுவின் தலைவன் என ஆந்தைக்கண்ணனால் அநுமானிக்க முடிந்தது. எனவே அவன் சேர நாட்டு நிலைபற்றியும், கொடுங்கோளூர் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியுள்ளன என்பது பற்றியும் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான். குமரன் நம்பி அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் மறுமொழி கூறாமல் மெளனம் சாதிக்கவே ஆந்தைக்கண்ணனின் விழிகளில் சீற்றம் பன்மடங்காகியது.

“கடம்பர்களிடம் சிறைப்பட்டவர்கள் உயிரோடு மீண்டு செல்ல நேர்ந்ததில்லை என்று நீ கேள்விப்பட்டிருப்பாய் !”

“ஆம் ! அதே கடம்பர்களை எங்களுடைய பேரரசர் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவர் பலமுறை ஓட ஓட விரட்டியிருக்கிறார் என்பதையும் சேர்த்துதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

“இருக்கலாம் இளைஞனே ! ஆனால் அதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்குவதற்குத்தான் இப்போது சமயம் பார்த்து வந்து இந்த மகோதைக் கரையை முற்றுகையிட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடாதே-” என இடி முழக்கம் போன்ற கடுமையான குரலில் குமரன் நம்பிக்கு மறுமொழி கூறிவிட்டுக் கடகடவென அரக்கச் சிரிப்புச் சிரித்தான் ஆந்தைக்கண்ணன். பேச்சோடு பேச்சாக அவனிடம் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கொடுங்கோளுரில் இருந்து சிறைப்பிடித்து வந்த கொடுமையைக் கடிந்து குமுறலாமா என்றெண்ணி அப்படி எண்ணிய சுவட்டோடு அதை அடக்கிக் கொண்டான். ஒரு வேளை அமுதவல்வி அங்கே சிறைப்பட்டிருப்பாளேயாகில் தான் குமுறுவது காரணமாகவே ஆந்தைக் கண்ணன் அவளைத் தன்னோடு சேர்த்து உணர்ந்து - அவள் தன்னைச் சேர்ந்தவளே என்ற கருத்தினாலேயே - அவன் அவளைக் கொடுமைப்படுத்தக் கூடுமோ என அஞ்சி அந்த எண்ணத்தைக் குமரன் நம்பி கைவிட்டான்.