பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வஞ்சிமாநகரம்


 மாட்டேன். அவர்களையும் உடனழைத்துச் சென்று நகரத்தில் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நீக்கி உங்கள் வருகைக்கு வாய்ப்பாக வைத்திருப்பேன். அப்படி நான் செய்யத் தவறினால் என்னோடு உடன் வருகிற உங்கள் ஆட்களிடமே என்னைக் கொன்று போடுமாறு ஆணையிட்டு அனுப்புங்கள்” என்று குமரன் நம்பியே ஆந்தைக்கண்ணனிடம் உருகியபோது உடனிருந்த சேர நாட்டு வீரர்களுக்கு அந்தப் பச்சைத் துரோகத்தைக் கண் முன்னே கண்டு இரத்தம் கொதித்தது. ‘சீ! இவனும் ஒரு ஆண்மகனா?’ என்று குமரன் நம்பியை இழிவாக எண்ணினர் அவர்கள்.

அதே சமயத்தில் ஆந்தைக்கண்ணனும் குமரன் நம்பியின் திடீர் மனமாற்றத்தை உடனே நம்பிவிடவில்லை என்று தெரிந்தது.

“துரோகம் செய்ய முன்வருகிறவர்களை அவர்கள் நண்பர்களும் நம்பக்கூடாது, விரோதிகளும் நம்பக்கூடாது என்பார்கள். அதனால்தான் உன்னை நம்ப முடியவில்லை இளைஞனே?” என்று கூறி அவன் முகத்தையே கூர்ந்து கவனிக்கலானான் ஆந்தைக்கண்ணன். அவனுடைய உருளும் விழிகள் குமரனைத் துளைத்தன.

“என்னை முற்றிலும் நம்பவேண்டாம்! உங்கள் ஆட்களையும் உடன் அனுப்புங்கள் என்றுதானே நானும் கூறுகிறேன்” என்றான் குமரன்.

“இதில் நயவஞ்சகம் ஏதுமில்லையே?” என்று மறுபடியும் மிரட்டினான் ஆந்தைக் கண்ணன்.

“உங்களை எதிர்த்து யாராலும் நயவஞ்சகம் புரிய முடியாது” என்று ஆந்தைக்கண்ணனைப் புகழ்ந்து மறுமொழி கூறினான் குமரன். ஆந்தைக்கண்ணனின் முகத்தில் நம்பிக்கை ஒளி படரலாயிற்று.