பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வஞ்சிமாநகரம்


 மந்திராலோசனையில் கலந்து கொண்டிருந்த மற்றவர்களுக்கு இது பிடிக்கவுமில்லை, புரியவுமில்லை. ஆனால் வேளாவிக்கோ மாளிகை எல்லையில் இருந்துகொண்டு அழும்பில்வேளை எதிர்த்துப் பேசவும் அவர்கள் அஞ்சினார்கள். அழும்பில்வேளோ முற்றுகையை நீக்குவதற்கு குமரன்நம்பியைவிட வேறு தகுதியான ஆளில்லை என்றே வாதித்தார். தலைநகரப் பாதுகாப்பிற்கென்று இருந்த சில வீரர்களும், கொடுங்கோளுருக்கு அனுப்பப் பெற்றனர். வேளாவிக்கோ மாளிகை என்ற அரசதந்திரக் கட்டிடம் இதற்குமுன் இவ்வளவு பரபரப்பை அடைந்ததே கிடையாது.

அந்த மாளிகையின் தூண்கள் கட்டிடத்தை மட்டும் தாங்கி நிற்பதில்லை. மாபெரும் அரசதந்திர நிகழ்ச்சிகளையும் அதிராமல் தாங்கி நின்றிருக்கிறது. சேர நாட்டின் பெரிய பெரிய அரசியல் முடிவுகள் எல்லாம் இந்த அரசதந்திர மாளிகையில்தான் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. அழும்பில்வேள் வஞ்சிமாநகரத்தின் முதியவர்களோடு மந்திராலோசனை முடித்து அவர்களை எல்லாம் விடைகொடுத்து அனுப்பி விட்டாலும் தமக்குள் தவிர்க்கமுடியாத சிந்தனையில் ஆழ்ந்தார். இந்தப் பொறுப்பை கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவனான குமரன் நம்பி எந்த அளவு நிறைவேற்றியிருக்கிறான் அல்லது நிறைவேற்றவில்லை என்பதை அவரால் இன்னும் கணித்தறிய முடியாமலிருந்தது.

சொந்தமாகவே பரபரப்புக் காண்பிக்க ஏற்ற காரணம் தெளிவாகவே கூறப்பட்டிருந்தும் அதை அவன் விரைந்து நிறைவேற்றினானா இல்லையா என்பது தெரியவில்லை. மகோதைக் கரையில் கொடுங்கோளுரிலிருந்தும், முசிறியிலிருந்தும் ஒவ்வொரு விநாடியும் செய்திகளை எதிர்பார்த்த வண்ணம் விழித்திருந்தார் அழும்பில்வேள். வலியனும் பூழியனும் அவருக்கு உறுதுணையாக உடனிருந்தனரென்றாலாவது சிறிது ஆறுதலாயிருக்கும். அவர்களையும் குமரனோடு கொடுங்கோளுர் அனுப்பியாயிற்று. கொடுங்கோளுரிலிருந்து அவர்கள் கடைசியாக அமைச்சர் பெருமானுக்கு அனுப்பிய செய்தி: