பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

71



எதிரியின் படைத்தலைவன் தங்களிடம் தற்காலிகமாகச் சிறைப்பட்டிருக்கும் வேளையில் அவனிடமே இந்தக் கேள்விகளைக் கேட்பது எந்த அளவு உறுதியானது எந்த அளவு ஆபத்தானது என்பதைக் கூடப் புரியாத மனநிலையோடு அவர்கள் கேள்வி கேட்பதைக்கண்டு குமரனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. ஆனால் தன் உள்ளுணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவர்களுக்குத் தைரியமும் நம்பிக்கையும் ஊட்டிக்கொண்டே சென்றான் அவன். பொன்வானி முகத்துவாரத்தின் நெடுந்துாரம் கரைக்குள்ளே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர். இன்னும் சிறிது உள்ளே சென்றால் கொடுங்கோளூர் நகரமே வந்து விடும் என்ற நிலைமைக்கு முன்னேறிச் சென்று விட்டார்கள்.

“உள்ளே செல்லச் செல்ல நிலைமைகளை நீங்கள் இன்னும் நன்றாக அறியலாம்” - என்று குமரன் புன்முறுவலோடு அவர்களுக்குக் கூறினான்! புதர் அடர்ந்திருந்த ஓரிடம் வந்ததும் படகு மேலே போவதை விரும்பாமல் அங்கேயே நிறுத்தி விட்டார்கள் கடம்பர்கள்.

“ஆற்றின் இருபுறமும் வீரர்கள் யாரும் மறைந்திருக்கவில்லை என்பது உறுதியானால்தான் இந்த இடத்திற்கு மேலே நாம் போகலாம்” என்றார்கள் அவர்கள்.

“என்னை அதற்காக என்ன செய்யச் சொல்கிறீர்களோ, அதை நான் செய்கிறேன்” - என்றான் குமரன்.

“நீயே ஒரு விநாடி கரையில் இறங்கிப் பார்த்துச் சொல்! வீரர்கள் யாராவது தென்பட்டால் படைத்தலைவன் என்ற - முறையில் அவர்களை திரும்பப்போகச்சொல்லி விடலாம். தாங்களே இறங்கிப் புதர்களில் தேடினால் வீரர்கள் மறைந்திருப்பார்களாயின் அவர்களுக்கும் எங்களுக்கும் கைகலப்பு மூளும்”

“இறங்கிப் பார்ப்பதில் எனக்கு மறுப்பு ஒன்றும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் நீங்கள் என்னை நம்பவேண்டும்.