பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வஞ்சிமாநகரம்



இறங்கிப் பார்ப்பதற்குப் பதில் நான் தப்பி ஓடி விடுவேனோ என்ற என்மேலேயே உங்களுக்குச் சந்தேகம் வந்துவிடக் கூடாதல்லவா?”

இதைக் கேட்டதும் படகிலிருந்த கடம்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். குமரன் அவ்வாறு வெளிப்படையாகத் தன்னுடைய மனத்திலிருந்ததைக் கேட்டதே அவர்களுடைய சந்தேகத்தைத் தணித்துவிட்டிருந்தது. அவர்கள் அவனைக் கரையிறங்கிப் புதர்களில் வீரர்கள் மறைந்திருக்கிறார்களா என்பதைப் பார்க்கச் சொன்னார்கள். அவ்வாறு அவர்கள் முதன் முறை கூறியபோது அவன் வாளா இருந்து விட்டான். மூன்றாவது முறையும் வற்புறுத்தியபோது படகை ஒதுக்கச் சொல்லிக் கரையில் மெல்ல இறங்கினான்.

இவ்வாறு தயங்கித் தயங்கி அந்தக் காரியத்தை அவன் செய்ததினால் அவனுக்குத் தங்களிடமிருந்து தப்பி ஓடும் எண்ணம் இல்லை என்பது போல் அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் கையிலே உருவி வைத்தபடி இருந்த கொடுவாள்கள் இன்னும் அப்படியே இருந்தன. கரையிறங்கிய குமரன் புதரில் மெல்ல மெல்ல மறைந்தான். சில விநாடிகள் அவன் தென்படவில்லை. கால் நாழிகைக்குப்பின் மறுபடியும் புதர் சலசலத்தது. குமரன் திரும்பினான். குமரன் மட்டுமல்ல, அவனுக்குப்பின் ஒவ்வொருவராகப் பல சேர வீரர்களும் வந்தனர்.


13. ஒற்றன் ஒருவன்

ஒசைப்படாமல் குமரன் தன் பின்னே அழைத்து வந்த ஐம்பது சேர நாட்டு வீரர்களும் புதர்களிலிருந்து அந்தப் படகை வியூகமாக வளைத்ததுபோல் பல்வேறு திசைகளிலிருந்து வெளிப்பட்டனர். திடீரென்று இப்படி ஒரு நிலைமையை எதிர்பாராத கடம்பர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. உருவிய