பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

81



விரைந்து ஓடுவார்கள். அப்படி ஓடும்போது - மரக்கலங்களில் ஏதாவது ஒன்றினுள் சிறை வைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் அமுதவல்லியும் கலத்தோடு போக நேரிடும். அப்படி நேருவதற்குள் முந்திக்கொண்டு விடவேண்டும்.

‘இவ்வளவு அரும்பாடுபட்டும் இறுதியில் என் உயிர்க் காதலியை நான் இழந்துவிடக் கூடாது என்று நினைத்தான் குமரன் நம்பி. ஆந்தைக்கண்ணனுடைய எதிர்விளைவு எப்படியானாலும் அதற்கேற்பத் திட்டங்களை நினைத்துவைத்துக் கொண்டபின் அவனும் பொன்வானி முகத்துவாரத்துக்குச் சென்று பதுங்கி இருந்தான். நேரம் ஆக ஆகக் கவலை அதிகமாகியது. நடுஇரவும் கடந்தது. முகத்துவாரத்தில் படகுகள் எவையுமே தென்படவில்லை. தாங்கள் எதிர்பார்க்கிற நேரத்தை விட்டு விட்டு எல்லாரும் அயர்ந்தபின் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று வந்து தாக்கலாமென்ற எண்ணத்தில் ஆந்தைக் கண்ணன் தாமதம் செய்கிறானோ என்றும் தோன்றியது. குமரன் நம்பியைப் போலவே போர் நிலை அறிந்து வேளாவிக்கோ மாளிகைக்கு உடனுக்குடன் அறிவிப்பதற்காக அமைச்சர் அழும்பில்வேளின் ஆட்களும் பொன்வானி முகத்துவாரத்துப் புதர்களில் பதுங்கியிருந்தனர். குமரன் பதுங்கியுருப்பதை அவர்களும், அவர்கள் பதுங்கியிருப்பதை குமரனும் முதலில் கவனிக்கவில்லை என்றாலும் சிறிது நேரத்தில் இருசாராருமே சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது. முதலில் வலியன் தான் குமரன் நம்பியிடம் பேசினான்:-

“கடம்பர்களிடமிருந்து தப்பி வந்ததற்காகவும் படைத் தலைவருக்குத் தமது மனம் நிறைந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்குமாறு கூறியனுப்பியிருக்கிறார் நம் அமைச்சர் பெருமான்”

“இதில் என்னைப் பாராட்டுவதற்கு எதுவும் இல்லை! சந்தர்ப்பம் ஒத்துழைக்காமல் போயிருந்தால் நானே தப்பியிருக்க முடியாது. நான் தப்பி வந்துவிட்டாலும் என்னோடு சேர்ந்து