பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வஞ்சிமாநகரம்



சிறைப்பட்ட கொடுங்கோளுர் வீரர்கள் இன்னும் கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களிலேதான் சிறைப்பட்டு வாடியிருக்கிறார்கள். அவர்களை இனியும் காலதாமதமின்றி மீட்கவேண்டும். இல்லாவிட்டால் என் உயிருக்கு ஆசைப்பட்டு நான் மட்டும் தப்பி விட்டேன் என்பதாக எண்ணி அவர்கள் மனங்குமுற நேரிடும். இந்த நிலைகள் எல்லாம் தெளிவாக வேளாவிக்கோமாளிகைக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றனவோ இல்லையோ, எனக்குத் தெரியாது!’ என்று குமரன் நம்பி கூறியவுடனே அவனுக்கு மறுமொழி கூறாமல் வலியனும் பூழியனும் தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சிறிது நேர மெளனத்துக்குப் பின் குமரன் நம்பியை நோக்கி “கொடுங்கோளுர் வீரர்களையும் காப்பாற்றவேண்டும், இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியையும் தேடிப் பிடித்துக் காப்பாற்றி மீட்டு வரவேண்டும் என்பதை அதற்குள் மறந்துவிட்டீர்களா, படைத்தலைவரே?” என்று அவர்கள் இருவரும் கேட்டனர்.

குமரன்நம்பி உடனே சிறிதும் தயங்காமல் “ஒரு வேளை நான் மறந்துவிட்டாலும், கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைப்பற்றி எனக்கே அடிக்கடி நினைவூட்டுவதற்கு நீங்களிருவரும் இருக்கும்போது நான் ஏன் கவலைப் படவேண்டும்” என்று குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே கூறினான். படைக்கோட்டத்துத் தலைவனான அவன் அவ்வாறு கூறியதை அவர்களும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.

“ஒரு பேச்சுக்காக இப்படி மறுமொழி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறோம் படைத் தலைவரே உண்மையில் உங்கள் இதயம் இவற்றை எல்லாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா, என்ன?” பதிலுக்கு வினவினார்கள் அவர்கள்.

அதற்குப்பின் குமரன் நம்பி அவர்களிடம் எதுவும் பேச வில்லை. கீழ்த்திசை வெளுத்து விடிந்துவிடுமோ என்று பயப்படுமளவுக்கு நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. போனவனோ,