பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

87



பயனுள்ளதாக இருக்கும். நேரமாகிறது. பொழுது நன்றாக விடிந்து விட்டது. படகு உள்ளே வரவர இங்கு நிலவும் மயான அமைதியைப் பார்த்து அவர்கள் மனத்தில் சந்தேகம் அதிகமாகுமே தவிரக் குறையப் போவதில்லை. படகிலுள்ள ஆந்தைக்கண்ணனின் வீரர்களைத் தவிர நம்முடைய வீரர்களுக்கும் சந்தேகம் உண்டாவதை இனிமேல் தவிர்க்க முடியாது. எனவே நிலைமையைத் தந்திரமாக எதிர்கொண்டு என்னென்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறேன் நான்” - என்று வலியனுக்கு குமரன் நம்பி கூறிய பதிலில் அவனுடைய கோபமும் மெல்ல ஒலித்தது.

“அதற்காகக் கேட்கவில்லை படைத்தலைவரே அமைச்சர் பெருமான் இங்கு நிகழும் நிகழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பார். அவருக்குச் செய்தி சொல்லி அனுப்பவே உங்கள் உள்ளக்கிடக்கையை வினாவினோம்” என்று சிறிது தணிவான குரலிலேயே பதில் கூறினான் பூழியன்.

அவர்கள் இருவரும் இவ்வாறு அடிக்கடி அமைச்சர் பெருமானின் பெயரை நினைவூட்டிக்கொண்டிருப்பதையும் குமரன் நம்பி விரும்பவில்லை. ஆனால் மறுமொழி எதுவும் கூறாமல் மேலே ஆகவேண்டிய காரியத்தைச் செயற்படுத்தலானான் அவன். இதே அமைதியைத் தொடரவிட்டால் ஒன்று படகில் வரும் கடம்பர்கள் சேரநாட்டு வீரர்களையும் திரும்ப அழைத்துக்கொண்டு வந்த வழியே மீண்டும் சென்று விடுவார்கள். அல்லது-தங்களுக்கு ஏற்பட்ட வெறுப்பினாலும் உடனிருக்கும் கொடுங்கோளுர் வீரர்களைத் துன்புறுத்தத் தொடங்குவார்கள். இந்த இரண்டு விளைவுகளுமோ அல்லது இரண்டில் ஏதாவது ஒன்றோ ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமானால் உடனடியாகச் செயல்படவேண்டும். சிறிது நேரத் தாமதம்கூட விளைவை மாற்றிவிடும்.

மின்னல் நேரத்தில் குமரன் நம்பியின் உள்ளத்தில் ஒரு சூழ்ச்சி தோன்றியது. தானும் சில வீரர்களும் எதிர்ப்பட்டு - முகத்