பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வஞ்சிமாநகரம்



துவாரத்தில் வந்து கொண்டிருக்கும் கடம்பர்களின் படகை - அவர்களுடைய சதிக்குத் துணையாகிற விதத்தில் வரவேற்பது போல வரவேற்று கரையிறக்குவதென்றும் கரையிறங்கியதுமே கடம்பர்களை மட்டும் சிறைபிடிப்பதென்றும் முடிவு செய்து கொண்டான் அவன். இந்த முடிவுக்கு உடன்துணை வருவதற்கு ஏற்ற வீரர்கள் பலரை அருகிலேயே புதர்களில் மறைந்திருக்கச் செய்வதென்றும் தீர்மானித்துக் கொண்டான். இதில் ஒரு தொல்லையும் இருந்தது. படகை எதிர்கொண்டு கடம்பர்களைத் தான் அவர்களுக்கு வேண்டியவன்போல் நடித்து வரவேற்றுக் கொண்டிருக்கையில் படகிலிருக்கும் கொடுங்கோளுர் வீரர்கள்-தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டால் என்ன செய்வது என்றும் தயங்கினான் குமரன் நம்பி இந்தத் தயக்கமும் சிறிது நேரம் தான் இருந்தது.

குமரன்நம்பியின் மனம் துணிந்து விட்டது. அந்த நாடகத்தை நடித்தே தீர வேண்டிய நிலையில், தான் இருப்பதை அவன் உணர்ந்தான். தன்னுடன் வரவேண்டிய வீரர்களுக்கும் வலியன், பூழியன் ஆகியோருக்கும் திட்டத்தை விளக்கிவிட்டுச் செயலில் இறங்கினான் குமரன் நம்பி.

அவனும் அவனுடன் அந்த வஞ்சக நாடகத்தில் நடிக்க இருந்த வீரர்களும் புதர்களிலிருந்து வெளிப்பட்டுத் தோன்றினர்.

குமரன் நம்பி முன்னால் நடந்து சென்று கரையில் நின்ற படியே படகை நோக்கிப் புன்முறுவல் பூத்தான். “வரவேண்டும் வரவேண்டும் நண்பர்களே ஆந்தைக்கண்ணரின் திட்டத்துக்கு நன்றியோடு உதவிசெய்ய நாம் சேர்ந்து பாடுபடுவோம். இன்னும் சிறிது நேரத்தில் இந்தக் கொடுங்கோளூர்- கடம்பர் வசமாகி விடும்” என்று இரைந்த குரலில் அவன் படகை நோக்கிக் கத்திய போது படகிலிருந்த கடம்பர்களில் முகத்தில் மலர்ச்சியும், கொடுங்கோளூர் வீரர்களின் முகத்திலே சீற்றமும் தோன்றலாயின. அதைக் குமரன் நம்பியும் கவனிக்கத் தவறவில்லை.