பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

95



தோட்டத்தில் உலாவிக்கொண்டிருக்கலாம் என்று அவன் புறப்பட்டபோது அவனை அவ்வாறு செய்யவிடாமல் அவரே வந்துவிட்டார். அவரைத் திடீரென்று எதிரே பார்த்தவுடன் அவனுக்கு கையும் காலும் ஒடவில்லை. அந்தக் கம்பீரத் தோற்றத்தை எதிர்கொள்வது கடினமாயிருந்தது. அவருக்கு வணக்கம் செலுத்தி வரவேற்ற சுவட்டோடு - உடன் உள்ளே சென்றான் குமரன் நம்பி.

“கொடுங்கோளுர்ப் படைக்கோட்டத் தலைவன் இந்தச் சில நாட்களில் அரசியல் சாகஸங்களில் தேர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. கடம்பர்களின் தலைவனையே ஏமாற்றும் அளவிற்கு வளர்ந்த திறமையைப் பாராட்ட வேண்டியதுதான்” என்று அவர் தொடங்கியபோது அவனுக்கு மறுமொழி எதுவும் கூறுவதற்குச் சொற்கள் கிடைக்கவில்லை. அவன் வாளா நின்றான்.

மெளனமாக இதைப் பார்த்தபடி அமைச்சர் அழும்பில்வேள், உலாவி வரத் தொடங்கினார். உலாவிக்கொண்டே வந்தவர், திடீரென்று ஒரு திருமுக ஒலையை எடுத்து, “இந்த ஒலை இன்று காலையில் எனக்குக் கிடைத்தது. படைமுகத்திலிருந்து வந்திருக்கிறது. இதைக் கவனித்தால் நீ செய்ய வேண்டிய காரியங்களில் உனக்கு எவ்வளவு விரைவு தேவையென்று உடனே புரியும்.”

“ஒலையை நான் கவனிக்கும்படி என்ன இருக்கப்போகிறது அமைச்சர் பெருமானே! கட்டளை இடவேண்டியதை நீங்களே இடலாம்.”

“கட்டளையை நான் இடாவிட்டாலும் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்க வேண்டுமென்று படைத்தலைவனுக்கு ஆவல் இருக்காதா என்ன?”

“நாட்டைக்காக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நாட்டில் அமுதவல்லியைக் காப்பதும் ஒரு சிறு கடமையே தவிர அமுதவல்லியைக் காப்பதே என் நோக்கமாயிருக்க முடியாது.