பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

97



வெற்றிவாகை சூட வேண்டும். உன் வெற்றிச் செய்தியை மன்னருக்குத் தெரிவிக்கும் வாய்ப்பை எனக்குக் கொடு. யாருடைய துணையுமின்றிக் கொடுங்கோளுர் படைக்கோட்டத் தலைவனே கடற்கொள்ளைகாரர்களைத் துரத்தினான் என்ற பெருமையை நீ அடைய வேண்டும். அழகுச் செல்வமாகிய அமுதவல்லியை மீட்க வேண்டும் என்பதையும் மறந்துவிடாதே” என்று மிக நிதானமாக அவர்மீண்டும் வற்புறுத்தியபோது, அவன் உள்ளத்தில் அவர் மீதிருந்த சினம் சற்றே தணிந்தது.

அமுதவல்லிக்கும் தனக்கும் இடையேயுள்ள தொடர்பு தெரிந்து அவர் அவ்வாறு வற்புறுத்துகிறாரா அல்லது இயல்பாகவே வற்புறுத்துகிறாரா என்று புரியாமல் தயங்கினான் அவன். உள்ளத்திலிருக்கும் நினைவு எதுவோ அதையே அவரும் வற்புறுத்தவே அவனுடைய உற்சாகம் அதிகமாகியது. அமைச்சர் பெருமானுக்கு முன்னால் சூளுரை கூறவும் துணிந்துவிட்டான் அவன்.

“பெருமன்னரும் படைத்தலைவர்களும் குயிலாலுவத்தை வென்று வாகை குடித் திரும்புவதற்கு முன்னர் கடற்கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்களை வென்று வாகை சூடுவேன் என இன்று இந்த விநாடியில் சேரநாட்டின் மிகச் சிறந்த மதியூகியும், அரசதந்திர வித்தகரும் ஆகிய தங்கள் முன் சூளுரைக்கிறேன். நான் வெற்றி வாகை சூடுவேன் என்று கூறும் இந்த உறுதியிலேயே இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்பேன் என்ற உறுதியும் அடங்கியிருக்கிறது. தாங்கள் இனியாவது என்னை நம்பி விடைகொடுக்க வேண்டும். பல விதங்களில் கரையோரத்து மரக்கலத்தில் தங்கியிருக்கும் ஆந்தைக்கண்ணனின் ஆத்திரத்தைக் கிளறிவிட்டிருக்கிறேன். ஆகவே, இனி ஒவ்வொரு விநாடியும் நான் கொடுங்கோளூரின் எச்சரிக்கையோடு காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் தங்கள் அழைப்பைப் பொருட்படுத்தியே வந்தேன்.”