பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றை மேற்கொண்டுள்ளார்,புலவர் காக்கைப்பாடினியார். கடலில் குடித்த நீரையெல்லாம் உலகம் உய்ய, மழையாகப் பெய்து ஒய்ந்த நிலையில், கடல்நீர் குடித்தபோது பெற்ற கருநிறத்தை இழந்து, மெல்லமெல்ல வெண்ணிறம் பெற்று விரைந்து ஓடி, இறுதியில் மறைந்தே போவது மழையின் இயல்பு. மழையின் இவ்வியல்பினை உணர்ந்திருந்த காரணத்தால், சேரலாதனை, மழையோடு உவமைகாட்ட அஞ்சுவார் போல், "சேரலாத! வந்து இரப்பார்க்கு எல்லாம், மாரி போல், வரையாது வாரிவாரி வழங்குகின்றன:!பெய்து உலகை வாழவைக்கும் கார்முகில் பெய்து தன்தொழில் முடித்த நிலையில், வெண்மையுற்று இல்லாகிப் போவது போல், நீயும், எங்கே, வளன் இழந்து இல்லானகிப் போய் விடுவையோ என அஞ்சுகிறது என் உள்ளம்; ஆகவே, அந்நிலை நினக்கு உண்டாகாவாறு காக்க இறைஞ்சுகிறது என்நெஞ்சம்”, எனக் கூறியதன் மூலம், சேரலாதன் கொடைவளத்தைப் பாடியதாக அமைந்திருக்கும், நச்செள்ளையார் நாநலம்,நயந்து இன்புறற்கு உரியது.

"பெய்து புறந்தந்து பொங்கல்ஆடி, விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்று, அருலியரோ பெரும!"

              -பதிற்றுப்பத்து: 55:15-17.

தமிழ்நாட்டின் வடஎல்லையாகிய வேங்கடமே, நிலநடுக் கோட்டுக்குச் சற்றே தெற்கில் உள்ளது. ஞாயிறு, உலகைக் கிழக்கு மேற்காகச் சுற்றி வருவது ஒருபால் நிகழ்ந்து கொண்டிருக்க, ஆறுதிங்கள், அக்கோட்டிற்கு வடக்கிலும் தெற்கிலுமாகச் சென்று மீள்வதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவ்வகையால், ஆடிமுதல் மார்கழி முடிய, ஞாயிறு வடக்கிலும், தைமுதல், ஆணிமுடிய தெற்கிலும் இருந்து வருகிருன்.

15

15