பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வனதேவியின் மைந்தர்கள்

“அவந்திகா? என்ன சொன்னேன்? எதற்காக அப்படி அலறினிர்?”

“அலறினேனா? இல்லை. நீங்கள் அசைந்தீர்கள். சிப்பின் கூரிய பல் முனைபட்டு வருத்தப் போகிறதே என்ற அச்சத்தால் உரத்துக் கூவிவிட்டேன்...”

“மன்னர் தீண்டமாட்டார் என்ற சொல் எப்படி வந்தது?.... ”என்று பேதையாகப் புலம்புகிறாள்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது மன்னருடன் ஆசைப்பட்டதற்கு ஏற்பப் போகப் போகிறீர்கள். அந்த வருத்தமெல்லாம் ஆதவனைக் கண்ட பனியாகக் கரைந்து விடும்; எழுந்திருங்கள், குலதெய்வத்தைத் தொழுது உணவு கொள்ளச் சித்தமாகுங்கள். தேர் வந்துவிடும். மன்னர் உணவு கொண்டு தான் வருத்வாராக இருக்கும். ராதை உணவு கொண்டு வருவாள். நான் சென்று தாங்கள் கொண்டுசெல்லும் பொருட்கள், ஆடைகளைப் பெட்டிகளில் எடுத்து வைத்து விட்டு வருகிறேன்!”

அவந்திகா விரைகிறாள்.

பூமை, குலதெய்வமாகிய தேவன் இருக்கும் மாடத்தின் முன், தாமரை மலர்களை வைத்துக் கண்மூடி அருள் வேண்டுகிறாள். வணங்குகிறாள். துாபம் புகைகிறது; தீபம் சுடர் பொலிகிறது.

“தேவனே, இந்தக் குலக்கொ டிக்குத் தங்கள் ஆசியை அருளுங்கள். வம்சம் தழைக்க, ஒரு செல்வனை அருளுவீர்!”

பட்டாடை சரசரக்க, ஊஞ்சலில் போடப்பட்ட இருக்கையில் வந்து அமருகிறாள். முன்றிலில் இரண்டு அணில்கள் கீச்சுக்கீச் சென்று கூவிக்கொண்டு ஒன்றை ஒன்று துரத்துகிறது. கிளிக்கூண்டுகளில் கிளிகள் இல்லை. எப்போதும் எல்லா வற்றையும் திறந்து விடுவாள். அவை விருப்பம் போல் வந்தமர்ந்து பணிப்பெண்கள் வைக்கும் பால்-பழம் அருந்தும். இவளுடைய தத்தம்மா இல்லை. அது இருக்கும். பூனை கவ்வியது அவள் தத்தம்மா இல்லை...