பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

101

கை கழுவ நீரும் தாலமும் ஏந்தி வருகிறாள்.

“உனக்கு எத்தனை குழந்தைகள்?

“இரண்டு பிள்ளைகள்...”

“அவர்கள் குருகுல வாசம செய்கிறார்களா?”

“எங்களுக்கேதம்மா குருகுல வாசம்? அப்பனுடன் உழுவதற்குப் போகிறான். இளையவன் ஆறு வயசு கொட்டில் சுத்தம் செய்யும். ஆடு மேய்க்கும். இவள் அவனுக்கும் இளையவள். வீட்டில் தனியாக இருந்தால் ஒடிப் போய்விடும்.”

“ஏன் ராதை? உங்கள் பிள்ளைகள் குருகுல வாசம் செய்யக்கூடாதா?” அவள் சிரிக்கிறாள். வெறுமை பளிச்சிடுகிறது.

“மன்னர் ஆட்சியில் வாழ்கிறோம். நேரத்துக்குச் சோறு. ஏதோ பணி கிடைக்கிறது. மந்திரக் கல்வியும் தந்திரப் போரும் உயர்ந்த குலத்தோருக்கே உண்டு...”

பூமை கைகழுவவும் மறந்து சிந்தையில் ஆழ்கிறாள்.

எத்துணை உண்மை? மந்திரக்கல்வி... தந்திரப்போர்...

இதெல்லாம் யாரிடமிருந்து யாரைக் காப்பாற்ற?

மன்னர்கள் யாரிடமிருந்து யாரைக் காப்பாற்ற வில்லும் அம்பும் சுமந்து திரிய வேண்டும்?

இவள் பிள்ளைக்கும் வில் வித்தை பயிற்றுவிப்பார்கள். நீ உன் அரசைக் காப்பாற்றப் பகைவர்களை அழிக்க வேண்டும். யார் பகைவர்கள்? பகைவர்கள் எப்படித் தோன்றுகிறார்கள்? முனிவர்களுக்கு அரக்கர்கள் எப்படிப் பகைவர்களானார்கள்?

சுற்றிச் சுற்றி ஒரே இடத்தில் வந்து நிற்கிறாள். அதை விட்டு வெளியே வர முடியவில்லை.

திடீரென்று ஒர் அச்சம் புகுந்து கொள்கிறது. இப்போது, மன்னரும் இவளும் மட்டும் கானகத்துக்குச் செல்லும்போது, முனிவர்களின் ஆசிரமங்களில் தங்கும்போது, ஆபத்து நேரிடாது என்பது என்ன நிச்சயம்?